

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், முன்னணி நட்சத்திர நடிகர்கள் அமைதி காத்து வருகின்றனர். சில நடிகர்கள் ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வாக்களிக்கலாம் என அறிவித்துள்ள நிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை தங்களுக்கு ஆதரவாக திருப்ப அரசியல் கட்சியினர் களம் இறங்கியுள்ளனர்.
தமிழக தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தேர்தலில் ஆறு முனை போட்டி ஏற்பட்டுள்ளதால், ஒவ்வொரு கட்சியினருக்கும் கிடைக்க கூடிய ஒவ்வொரு ஓட்டும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. வெற்றி, தோல்விகள் சொற்ப வாக்குகள் அடிப்படையில் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
தேர்தல் களத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் நலக்கூட்டணி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்க முயன்று வருகிறது. பாமக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்களது சொந்த பலத்தை நம்பியே தேர்தல் களத்தில் உள்ளனர்.ஆறு முனை போட்டி ஏற்பட்டுள்ளதால், வாக்காளர்களின் ஓட்டு பல்வேறு விதமாக பிரிய வாய்ப்புள்ளது. அரசியல் கட்சியினருக்கான வெற்றி வாய்ப்பு, இழுபறி நிலையும், சொற்ப ஓட்டு வித்தியாசத்திலும் பெற கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் சாதி ரீதியான அமைப்புகள், தொழில் ரீதியான கூட்டமைப்புகள், விவசாயம், வழக்கறிஞர், மற்றும் பல்வேறு சங்கங்கங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்கள் மூலம் கணிசமான வாக்குகளை பெறும் இறுதிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ற வகையிலான பெரும் அமைப்புகளை சார்ந்த தலைவர்களை சந்தித்து, சால்வை அணிவித்து, ஆதரவு திரட்டுகின்றனர். முன்னணி நட்சத்திர நடிகர்களின் ரசிகர் மன்றங்களை தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் எந்த கட்சியை சேர்ந்தவர்களும் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
தற்போது, இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் வேளையில், இளம்தலைமுறை வாக்காளர்களை கவரும் விதமாக நட்சத்திர நடிகர்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அரசியல் கட்சியினர் அழைத்து தங்களுக்கு ஆதரவு தர வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு நடிகருக்கும் 100 முதல் 200 ரசிகர் மன்றங்கள் உள்ளன. ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்களையும், ஒன்றியம், கிளை தலைவர்கள் என ஒட்டு மொத்த ரசிகர் பட்டாளத்தையும் அரசியல் கட்சியினர் தேர்தல் வலையில் வீழ்த்தி, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, இறுதி கட்ட பிரச்சாரத்தில் களம் இறக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.