Published : 01 May 2022 06:10 AM
Last Updated : 01 May 2022 06:10 AM

சென்னை மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்களுக்கு கொசு ஒழிப்பு முறை குறித்து பயிற்சி அளிக்கப்படுமா?

சென்னை

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், கேப்டன்காட்டன், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நதிகள்,கால்வாய்கள் உள்ளன. மாநகராட்சியின் அலட்சியத்தால் பெரும்பாலான நீர்வழித்தடங்களில் கழிவுநீர் செல்கிறது. இதனால், அவை அனைத்தும் கொசு உற்பத்தி மையங்களாக மாறியுள்ளன.

மாசடைந்த நீர்வழித் தடங்களும், கொசுத் தொல்லையும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகசென்னையின் முக்கிய அடையாளங்களாக மாறிவிட்டன. குறிப்பாக, சென்னை மாநகரில் தற்போது கொசுத் தொல்லைதான் முக்கியப் பிரச்சினையாக உள்ளது.

நீர்வழித் தடங்களில் உள்ள கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்கள், மாலை நேரத்தில்தான் வெளியில் வரும். இந்த கொசுக்களை ஒழிக்க காலை நேரத்தில் புகை மருந்து அடிக்கப்படுகிறது. மேலும், டெங்கு பாதிப்பு இருந்தால் மட்டுமே காலை நேரங்களில் புகை மருந்து அடிக்கப்படுவது வழக்கம். புகை மருந்துக்காகவே மாதத்துக்கு ரூ.2 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது.

கொசுத் தொல்லை குறித்து புகார் வந்தால், முதலில் அந்தப் பகுதியில் எத்தகைய கொசு இருக்கிறது, அது டெங்கு பரப்பும் நல்ல நீரில் வளரும் கொசுவா அல்லது மலேரியாவைப் பரப்பும் கழிவுநீரில் வளரும் கொசுவா என்பதைக் கண்டறிய வேண்டும்.

பின்னர், கொசு உற்பத்தியாகும் மையத்தைக் கண்டறிந்து, அதை அழிக்க வேண்டும். இவை எதுவும் பலனளிக்காத சூழலில், கடைசி வாய்ப்பாகவே, செலவு அதிகம் பிடிக்கும் புகை மருந்து அடிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. மாநில பொது சுகாதாரத் துறையும் அதையே வலியுறுத்துகிறது.

ஆனால், சென்னை மாநகரில் கொசுத் தொல்லை குறித்து 1913 புகார் தொலைபேசி எண், ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் கவுன்சிலர்கள் மூலம் புகார் வந்தால், புகை பரப்புவது மட்டுமே தீர்வாகக் கருதி, அந்த நடவடிக்கை மட்டுமே மேற்கொள்கின்றனர். சென்னையில் கொசு ஒழியாததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

மனிதர்களைப்போல, கொசுக்களும் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்துக் கொள்ளும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பரிந்துரைக்கப்பட்ட புகை மருந்தேபயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு கொசுக்கள் கட்டுப்படுகிறதா என்ற ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.

வசதியை பயன்படுத்தவில்லை..

ஒருவருக்கு டெங்கு வந்த பிறகே, அங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மனிதர்களுக்கு டெங்கு வருவதற்கு முன்பே, கொசுவைப் பிடித்து, அவற்றில் டெங்கு வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும் வசதிகள் தமிழக அரசிடம் இருந்தும், அவற்றை மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்தவில்லை.

கூவம் ஆற்றில் ட்ரோன் மூலம் கொசுப்புழு ஒழிப்பு மருந்துதெளிக்கும்போது, கழிவுநீர் தேங்கும் மழைநீர் வடிகால்களிலும், இதர நீர்வழித் தடங்களிலும் ஒரே நேரத்தில் மருந்து தெளித்தால் மட்டுமே கொசுவைக் கட்டுப்படுத்த முடியும்.

எனவே, கொசு ஒழிப்பு முறை குறித்து மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்களுக்கு மாநில பொது சுகாதாரத் துறையினர் பயிற்சி அளிக்க வேண்டும். கவுன்சிலர்கள் வாய்வழியாகச் சொல்லும் புகார்கள் பதிவாவதில்லை. அதனால், மாநகராட்சியின் புகார் தெரிவிப்பு வழிமுறைகளில் மட்டுமே, கொசு தொடர்பான புகார்களைத் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி வழங்க தயார்

இதுகுறித்து மாநில பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கொசு ஒழிப்பு தொடர்பாக உரிய தொழில்நுட்ப உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, உரிய முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x