

இலங்கை ஆட்சியாளர்கள் இந்திய பிரதமர் மோடியைப் போல செயல்பட்டதால்தான் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டத்தை நினைவுகூரும் விதமாக, காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு தலைமையில் உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை கடந்த ஏப்.13-ம்தேதி தொடங்கியது. இந்தக் குழுவினர் கல்லணை, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம் வழியாக 232 கி.மீ தொலைவுக்கு பாத யாத்திரை மேற்கொண்டு நேற்று வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளி உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியை வந்தடைந்தனர்.
இதில், முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், அவர்கள் அங்கு உப்பு அள்ளி, வந்தே மாதரம் என முழக்கமிட்டு, நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டு, தியாகிகள் சுப்பையா பிள்ளை, சர்தார்வேதரத்தினம் பிள்ளை உள்ளிட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள்எம்.பி ராஜேந்திரன் உட்பட காங்கிரஸ் கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.
2024 தேர்தலில் வெல்வோம்
முன்னதாக, நாகை ரயில் நிலையத்தில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது: 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிதான் வெற்றி பெறும். கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பொருளாதாரம் மிகவும்சீர்குலைந்துள்ளது. கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 8 மாநிலங்களில் ஒரு நாளுக்குரிய நிலக்கரி தான் கையிருப்பு உள்ளது. அந்த மாநிலங்களில் அனல் மின் நிலையங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன.
மாநில அரசுகளே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்துகொள்ளலாம் என்பது சாத்தியமல்ல. இது மாநில அரசை பல வீனப்படுத்தும் என்பதாலேயே மத்திய அரசு இவ்வாறு செயல்படுகிறது. இந்தியா முழுவதும் கடும் இருளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதை சரிசெய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள ஆட்சியாளர்கள் இந்திய பிரதமர்மோடியை போல நடந்துகொண்டதால்தான் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அனைத்தையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதால் உள்நாட்டில் உற்பத்தி குறைந்துவிட்டது. இலங்கையில் பொருளாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றால் சுயசார்பு நிலை வேண்டும். அதற்கு இந்தியா உதவி செய்யும் என்றார்.
அப்போது, மாநிலச் செயலாளர் நவுஷாத், விவசாய பிரிவு மாநிலத் தலைவர் மீரா உசேன், மாவட்டத் தலைவர் அமிர்தராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.