

சிவகங்கை அருகே நாட்டாறுகால் ஆற்றில் ஆளும்கட்சி நிர்வாகி தலைமையில் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந் தது. மாவட்ட வருவாய் அலு வலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், கூட்டுறவு சங்கங் களின் மண்டல இணைப் பதிவாளர் ஜீனு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: நாட்டாறுகால் ஆற்றில் ஆளும்கட்சி நிர்வாகி தலைமையில் தொடர்ந்து மணல் கொள்ளை நடக்கிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. வைகை அணையில் சிவகங்கை மாவட்டத்துக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட மறுக்கின்றனர். தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக நிரந்தர அரசாணையை பெற வேண்டும்.
படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.9 கோடியை தராமல் பாக்கி வைத்துள்ளது. இதனால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியவில்லை.
லாடனேந்தல் பகுதியில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பருத்திக்கு பல தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் தர மறுக்கின்றனர். சாலைக்கிராமத்தில் பருத்தியை காப்பீடு செய்ய முடியவில்லை என்று பேசினர்.
மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: நாட்டாறுகால் ஆற்றில் மணல் கடத்தல் தடுக்கப்படும். வைகை அணையில் சிவகங்கை மாவட்டத்துக்கு நிரந்தரமாக தண்ணீர் திறப்பது தொடர்பான அரசாணை பெற அரசுக்கு கடிதம் அனுப்பப்படும். சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் வரும் மே மாதத்துக்குள் பாக்கித் தொகையை விவசாயிகளுக்கு கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. பருத்திக்கு அனைத்து கூட்டுறவு சங் கங்களிலும் பயிர்க்கடன் வழங்கப்படும்.
தற்போது முதல் கட்டமாக மாவட்டத் தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மாவட்டத்தில் 65 ஒன்றிய கண்மாய்கள் சீரமைக்கப்பட உள்ளன. 70 கண்மாய்களில் விவசாயிகள் வண்டல் மண் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.