Last Updated : 01 May, 2022 04:15 AM

 

Published : 01 May 2022 04:15 AM
Last Updated : 01 May 2022 04:15 AM

கூடுதல் விமானங்கள் வந்து செல்லும் வகையில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் ரூ.7.5 கோடியில் விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

சேலம்

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் கூடுதல் விமானங்கள் வந்து செல்லும் வகையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப்பணிகள் தொடங்கி உள்ளது.

சேலம் காமலாபுரம் விமான நிலையம் கடந்த 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் முன்வரவில்லை. பின்னர் அரசின் முயற்சியால் சேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்து தொடங்கியது.

தற்போது, சேலத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது.

கூடுதல் விமானங்கள் வந்து நிற்கும் வகையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, 136 ஏக்கர் நிலப்பரப்பில் விமானம் நிலையம் அமைந்துள்ள நிலையில், மேலும் விரிவாக்கம் செய்யும் விதமாக 566 ஏக்கர் நிலம் அரசு கையகப்படுத்தி கொடுக்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து சேலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கத் தலைவர் இன்ஜினியர் மாரியப்பன் கூறியது:

சேலம் காமலாபுரம் விமான நிலையம் மீண்டும் செயல்பட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது, விமான நிலையத்தில் 6 ஆயிரம் அடி நீளத்துக்கு ரன்-வே உள்ளதை விரிவாக்கம் செய்து, 8 ஆயிரம் அடி நீளத்துக்கு ரன்-வே மாற்றிடும் ஏப்ரான் கட்டுமானப் பணி நடைபெற உள்ளது. இதற்காக நிலம் அளவிடும் பணி தற்போது நடந்து வருகிறது. கட்டுமானப் பணி முடிந்ததும் சிறிய ரக விமானங்கள் நான்கும், பெரிய ரக விமானங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்க முடியும். இரவு நேரங்களில் விமானம் வந்து செல்லும் வகையில் மின்னொளி வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கொச்சின் மார்க்கங்களில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்களிடம், சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணி முடிந்ததும், விரைவில் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x