

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனையானது.
எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பண்டிகைக் காலங்களில் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனைநடைபெறுவது வழக்கம். வரும்3-ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு வளர்ப்போர் தங்களது ஆடுகளை விற்பனைக்காக நேற்று முன்தினம் இரவு முதலே சுமை வாகனங்களில் கொண்டு வந்திருந்தனர்.நேற்று காலை ஆட்டுச்சந்தைக்குள் வியாபாரிகள், ஆடு வளர்ப்போர் முகக்கவசங்களுடன் அனுமதிக்கப்பட்டனர். காலை முதல் சந்தைக்கு ஏராளமானோர் திரண்டனர்.
சுமார் 4 ஆயிரத்துக்கு அதிகமானஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், சீனி வெள்ளாடு ஆகியவை கொண்டு வரப்பட்டிருந்தன. சுமார் 6 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்தது.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த வியாபாரி எஸ்.கணேசன் கூறும்போது, “கடந்த பொங்கல் பண்டிகைக்கு கரோனா காரணமாக ஆட்டுச்சந்தை மூடப்பட்டிருந்தது. இதனால், ஆங்காங்கே தெரு சந்துக்களில் நின்று ஆடு வளர்ப்போர் ஆடுகளை விற்பனை செய்தனர். அப்போது எங்களது தேவையான அளவுக்கு ஆடுகளை வாங்க முடியவில்லை. தற்போது ரம்ஜான் ஆடுகள் வாங்க வந்தோம். ஆடுகள் விலை கடந்த ஆண்டுகளை விட சற்று அதிகமாக உள்ளது. ஆனால், தேவையும் அதிகமாக இருப்பதால் வாங்கிச்செல்கிறோம்” என்றார் அவர்.
விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரத்தை சேர்ந்த க.மாணிக்கம் என்பவர் கூறும்போது, “ஆடுகள்வளர்ப்பதற்காக வாங்க வந்தோம்.ரம்ஜான் பண்டிகைக்கு கறி ஆடுகள்தான் அதிகம் விற்பனையாகும் எனநினைத்தோம். ஆனால், அதனை விட ஆட்டுக்குட்டிகள் அதிகளவு விற்பனையாகி உள்ளது. அவற்றின் விலையும் சற்று அதிகமாகவே இருந்தது” என்றார்.