

கூட்டணியில் உள்ள தொண்டர்கள், இனி தூக்கத்தை மறந்து இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தஞ்சையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: 6 கட்சிகளைச் சேர்ந்த எங்கள் கூட்டணி தற் போது ஏறுமுகத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களோடு மக்களாக இருந்து ஆட்சி செய்வோம். உருட்டுக் கட்டையுடன் கூடிய ஆட்சி இருக் காது. எங்கு தவறு நடந்தாலும் நான் தட்டிக்கேட்பேன்.
நான் விவசாயக் குடும்பத் தில் பிறந்தவன். அதனால், விவசாயிகளின் சிரமங்கள் எனக்குத் தெரியும். கருணாநிதி, ஜெயலலிதாபோல எனக்கு நடிக் கத் தெரியாது. நாட்டையே கொள்ளையடித்துக் கொண்டிருந் தவர்களை இதுவரை யாரும் தட்டிக் கேட்கவில்லை. இப்போது நாங்கள் வந்துள்ளோம். தனியார் டிவி கருத்துக் கணிப்பில், மக்கள் நலக் கூட்டணிக்கு 130 முதல் 155 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போர்தான் இந்த தேர்தல். அதர்மத்தின் பக்கம் நிற்கும் திமுக, அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. வேட்பாளர்களிடம் நான் பணம் வாங்கவில்லை. எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் அப்பழுக்கற்றவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிர்வாகம் நடக்கும். சட்டத்துக்கு உட்பட்டுதான் போலீஸார் செயல்பட வேண்டும். 6 கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த யாரும் இனி தூங்கக் கூடாது. இரவு பகல் பார்க்காமல் வெற்றிக்காக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.