'தொழிலாளர்களின் உரிமைக்குக் கேடயமாகவும், போர்வாளாகவும் திமுக எப்போதும் திகழும்' - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் "கேடயமாகவும், போர்வாளாகவும்" திமுகவும், திமுக அரசும் எப்போதும் திகழும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான பேரணியை நடத்தி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ஆம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும் , அவர்களது உரிமைக்குரலைக் காதுகொடுத்து கேட்டு, அவற்றை நிறைவேற்றி வைக்கும் அரசாகவும், திமுக அரசு எப்போதும் விளங்கி வருகிறது.

ஒவ்வொரு தொழிலாளரின் எதிர்காலத்தையும் இனிமையாக்கிட அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிட எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வழியில் நடைபோடும் நமது திராவிட மாடல் ஆட்சியும், தொழிலாளர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஓராண்டு நிறைவடையும் முன்பே கடை மற்றும் நிறுவனங்களில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பணிபுரியும் இடத்தில் இருக்கை வசதி அளிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க "தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம் 2021-ஐ நிறைவேற்றியிருக்கிறது.

தொழிலாளர்கள் பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே பணி செய்ய வேண்டிய நிலை அகற்றப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிர் தொழிலாளர்கள் தங்குவதற்கு தங்குமிடம் கட்டுவதற்கு ஆணையிட்டு பெண்ணுரிமைக்கு மகுடம் சூட்டும் அரசாக எனது தலைமையிலான திமுக அரசு விளங்கி வருகிறது என்பதை தொழிலாளர் தோழர்கள் அனைவரும் நன்கு அறிவர்.

தொழிலாளர்கள் தமிழகத்தின், இந்த நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு. அவர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு என்றும் விளங்கும். தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் "கேடயமாகவும், போர்வாளாகவும்" திமுகவும் , திமுக அரசு எப்போதும் திகழும். "தொழில் அமைதி" மட்டுமே தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும் என்பதை நித்தமும் நெஞ்சில் கொண்டு தொழிலாளர்களின் வாழ்வில் எழுச்சி பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் மீண்டும் மே நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in