Last Updated : 30 Apr, 2022 02:49 PM

 

Published : 30 Apr 2022 02:49 PM
Last Updated : 30 Apr 2022 02:49 PM

களிமேடு தேர் விபத்து | தொடங்கியது ஒரு நபர் குழு விசாரணை; சாட்சியம் அளிக்க விரும்புவோருக்கு அழைப்பு

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் விபத்து நிகழ்ந்த தேரை பார்வையிட்ட ஒரு நபர் குழு தலைவர் குமார் ஜெயந்த். அருகில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் விபத்து குறித்து தமிழக அரசு அமைத்த, ஒரு நபர் குழு விசாரணை இன்று (30ம் தேதி) தொடங்கியது.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில், கடந்த 27-ம் தேதி அப்பர் சதய விழாவையொட்டி நடைபெற்ற தேர் வீதியுலாவில் உயரழுத்த மின் கம்பி தேர் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தேர் விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளோடு குமார் ஜெயந்த் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் களிமேடு கிராமத்து சென்ற குமார் ஜெயந்த், விபத்து நிகழ்ந்த தேரை பார்வையிட்டார். விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் நளினி ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும் விபத்தை நேரில் பார்த்த களிமேடு கிராமத்தைச் சேர்ந்த தாஸ், பாலாமணி, கண்ணகி ஆகியோரிடம் எப்படி விபத்து நடந்தது என கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பர் மடம் உள்ள கோயிலையும் பார்வையிட்டார்.

| படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

அப்போது செய்தியாளர்களிடம் குமார் ஜெயந்த் கூறும்போது, "முதல் கட்டமாக விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து ஓர் அறிக்கையும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்தபிறகு, அறிக்கை அளிக்கப்படும். மேலும், இந்த விபத்து குறித்து யாரேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணிக்கு பொதுமக்கள் சார்பில் சாட்சியம் அளிக்கலாம்.

விபத்து தொடர்பாக இன்றும், நாளையும் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளது. விசாரணை முடிந்த பின்னர் இதன் அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x