தேனியில் 36 ஆண்டுகளுக்குப் பின் 4 பேரவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி

தேனியில் 36 ஆண்டுகளுக்குப் பின் 4 பேரவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி
Updated on
1 min read

36 ஆண்டுகளுக்குப் பின் தேனி மாவட்டத்தில் மீண்டும் அதிமுக 4 தொகுதிகளிலும் வென்றுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 தொகுதிகளில் கடந்த 1980-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 4 தொகுதிகளிலும் அதிமுக வென்றது.

இதற்குப் பின்னர் இந்த தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறவில்லை, இம்முறை 4 தொகுதிகளிலும் வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே நேரத்தில் போடியில் கடந்த முறை திமுக வேட்பாளர் எஸ்.லெட்சுமணனை 29,906 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் இம்முறை இதே திமுக வேட்பாளர் எஸ்.லெட்சுமணனை எதிர்த்து 15,608 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல் கடந்த முறை ஆண்டிபட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் எல்.மூக்கையாவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் 21,031 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இம்முறை இதே திமுக வேட்பாளர் எல்.மூக்கையாவை எதிர்த்து போட்டியிட்ட தங்கதமிழ்செல்வன் 30,196 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றுள்ளார்.

கடந்த முறை பெரியகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஏ.லாசரிடம் வெறும் 5,641 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற திமுக வேட்பாளர் பி.அன்பழகன் இம்முறை 14,350 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கே.கதிர்காமுவிடம் தோல்வி அடைந்துள்ளார்.

கடந்த முறை மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஏ.லாசர் அதிமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றார். இந்தமுறை மக்கள் நல கூட்டணியில் இணைந்து 13,525 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.

கம்பம் தொகுதியில் கடந்த 2001-ல் மதிமுக சார்பிலும், 2006, 2011 ஆண்டுகளில் திமுக சார்பிலும் போட்டி யிட்ட என்.ராமகிருஷ்ணன் இம்முறையும் திமுக சார்பில் 3-வது முறையாகப் போட்டியிட்டார். ஆனால் அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையனிடம் 14,350 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தேமுதிக, பாமக, பாஜக, நாம்தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். நோட்டாவுக்கு 8,341 வாக்குகள் பதிவா கியிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in