Published : 30 Apr 2022 04:30 AM
Last Updated : 30 Apr 2022 04:30 AM
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில், அரசியல் பின்னணி கொண்ட கும்பலுக்கு தொடர்பு உள்ளது. அந்த கும்பலால் ஆபத்து இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவரது கணவர் ஹேம்நாத், காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிச.9-ம்தேதி சென்னை பூந்தமல்லி அடுத்தநசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில்தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் 2020 டிச.15-ம் தேதி கைது செய்யப்பட்டார். 2021 மார்ச் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நானும், என் மனைவி சித்ராவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். சித்ரா இறந்த உடனே நானும் இறந்துவிடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால், நான் நிரபராதி என்பதை நிரூபிக்கவே உயிரோடு இருக்கிறேன்.
அரசியலில் முக்கிய அந்தஸ்தில் உள்ள சிலருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பு உள்ளது. சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பண பலம், அரசியல் பலம் கொண்ட மாஃபியா கும்பல் இருக்கிறது. அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தினால், என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அந்த கும்பல் மிரட்டுகிறது. என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும் வரை நான் உயிரோடு வாழ விரும்புகிறேன். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT