Published : 30 Apr 2022 07:08 AM
Last Updated : 30 Apr 2022 07:08 AM

மலேசியா சுற்றுலா கட்டுப்பாடு நீக்கம்: துணைத் தூதர் சரவணன் தகவல்

சென்னை: மலேசியாவில் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்படுவதாகவும், மக்கள் வழக்கம்போல் சுற்றுலா மேற்கொள்ளலாம் எனவும் மலேசிய துணைத் தூதர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்னிந்தியாவுக்கான மலேசிய துணைத் தூதர் கே.சரவணன், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மலேசியாநாட்டில் சுற்றுலாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் விதி முறைகள் முழுமையாகத் தளர்த் தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்துதல், ஆர்டிபிசிஆர் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான கரோனா தொற்று வழிமுறைகளும் நீக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தலின்படி 2 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளுதல் மட்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்றபடி கரோனாவுக்கு முந்தைய சூழல் போலவே அனைவரும் மலேசியாவுக்கு தடையின்றி சுற்றுலா சென்று வரலாம்.

இந்த ஆண்டு 1 லட்சம் பேர் வரை மலேசியாவுக்கு சுற்றுலா செல்வார்கள். இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

மலேசிய சுற்றுலாத் துறையிடம் அனுமதி பெற்றுள்ள முகவர்கள் வழியாக பயணம் செய்பவர்கள் ஏதேனும் புகார் தெரிவித்தால் சம்பந்தபட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுமதி பெறாத முகவர்கள் மூலம் சுற்றுலா செல்வதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது மலேசிய சுற்றுலாத் துறையின் முதுநிலை இயக்குநர் (சர்வதேச விளம்பரப் பிரிவு) மனோகரன் பெரியசாமி, இயக்குநர் (தென்னிந்தியா) ரசய்டி எபிடி ரஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x