Published : 30 Apr 2022 04:19 AM
Last Updated : 30 Apr 2022 04:19 AM
சென்னை: ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கட்டாயம் நடைபெறும். சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டதால், இந்த கல்வி ஆண்டில் (2021-22) ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 40 முதல்50 சதவீதம் வரை பாடத் திட்டம் குறைக்கப்பட்டது. மேலும், இதன்அடிப்படையிலேயே ஆண்டு இறுதிதேர்வு மே மாதம் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வி துறை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் 1 முதல் 9-ம் வகுப்புக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
தேர்வுக்கு தயாராக வேண்டும் ‘தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்புவரை அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி’ என்று வெளியான செய்திதவறானது. தமிழகத்தில் இந்தஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்படும். ஏற்கெனவே அறிவித்தபடி, குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் மே 6 முதல் 13-ம் தேதி வரை இத்தேர்வுகள் நடைபெறும். எனவே, மாணவர்கள் தவறான தகவல்களை நம்பாமல், தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும்' இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT