Published : 30 Apr 2022 07:22 AM
Last Updated : 30 Apr 2022 07:22 AM
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், மே மாதம் பணி ஓய்வு பெறவுள்ள 4 நீதிபதிகளுக்கு பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. இதில் மூத்த நீதிபதிகள் பங்கேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகே.கல்யாணசுந்தரம் மே 26-ம் தேதியும், நீதிபதி வி.பாரதிதாசன் மே 6-ம் தேதியும், நீதிபதி எம்.கோவிந்தராஜ் மே 18-ம் தேதியும், நீதிபதி ஆர்.பொங்கியப்பன் மே11-ம் தேதியும் பணி ஓய்வு பெறுகின்றனர். மே மாதம் உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை என்பதால் இவர்களுக்கான பிரிவு உபசார விழா உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
டெல்லியில் நடைபெறும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி சென்றுள்ளதால், இந்த விழாவுக்கு மூத்த நீதிபதி எம்.துரைசாமி தலைமை வகித்தார். பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி ஆர்.சுதாகர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பணி ஓய்வு பெறவுள்ள 4 நீதிபதிகளையும் வாழ்த்தி, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் பேசினார். அதற்கு நன்றி தெரிவித்து 4 நீதிபதிகளும் பேசினர்.
நீதிபதி கே.கல்யாணசுந்தரம் பேசும்போது, ‘‘நான் வழக்கறிஞராக எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றங்களில் பணியாற்றியுள்ளேன். உயர் நீதிமன்ற நீதிபதியாவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் உள்ளிட்ட பலர், எனக்கு இந்தப் பதவி கிடைக்க உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு எனது நன்றி’’ என்றார்.
நீதிபதி வி.பாரதிதாசன் பேசும்போது, ‘‘32 ஆண்டுகள் பணியாற்றி முழு மனநிம்மதியுடன் ஓய்வு பெறுகிறேன். ஜூனியர் வழக்கறிஞர்கள், தொழிலை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொண்டால் கண்டிப்பாக நீங்களும் ஒருநாள் உயர்ந்த இடத்துக்கு வருவீர்கள்’’ என்றார்.
நீதிபதி எம்.கோவிந்தராஜ் பேசும்போது, ‘‘எனக்கு இந்த உயர்ந்த பதவியை அளித்த இறைவனுக்கும், நல்ல கல்வியைக் கொடுத்த என் பெற்றோருக்கும், என்னை நீதிபதியாக பரிந்துரைத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஃப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, ஆர்.பானுமதி ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
நீதிபதி ஆர்.பொங்கியப்பன் பேசும்போது, ‘‘ஒவ்வொரு தொடக்கத்துக்கும், ஒரு முடிவு உண்டு. அதன்படி எனது நீதிபதி பணிக்காலமும் முடிவுக்கு வருகிறது. எனது பெற்றோர் மற்றும் எனது சீனியர் ஈரோட்டைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT