Published : 30 Apr 2022 03:50 AM
Last Updated : 30 Apr 2022 03:50 AM

இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு ஏற்பாடு: மத்திய அரசு அனுமதி அளிக்கக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசின் சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்மொழிந்து பேசினார்.

சென்னை: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடிக்கு அரிசி, மருந்துகள், பால்பவுடர் அனுப்ப தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவற்றை உடனடியாக அனுப்பி வைக்க தேவையான அனுமதிகளை வழங்க மத்தியஅரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில், இலங்கை யில் நிலவும் பொருளாதார நெருக் கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவி செய்வது தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடல் சூழ்ந்த இலங்கை நாடு,இன்று கண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் ஈழத் தமிழர் நலன் கருதி அரசியல் ரீதியாக பல்வேறு முழக்கங்களை நாம் முன்வைத்திருக்கிறோம். காலச்சக்கரம் இலங்கை மக்களை அலைக்கழித்து எங்கோ கொண்டுபோய் நிறுத்திவிட்டது. இருப்பினும், இன்று மனிதாபிமான அடிப்படையில் நாம் கைகொடுக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நிலைப்பாடாகும். தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அங்குள்ள மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் அனைவரின் மனதிலும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

பெட்ரோல், டீசலுக்காக வாகனங்கள் பலமணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றன. மண்ணெண்ணெய் வாங்க பொதுமக்கள் 6 மணி நேரம் காத்திருக்கின்றனர். மின் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் செயல்பட முடியவில்லை. அத்தியாவசியப் பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. உயிர்காக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு உள்ளது.

பால், பால் பவுடர், உணவுப் பொருட்கள் என அனைத்து விலைகளும் பல நூறு மடங்கு உயர்ந்துவிட்டதால் பச்சிளம் குழந்தைகளும் துன்பத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

அண்டை நாட்டு பிரச்சினையாகவோ, யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்றோ பார்க்க முடியாது. அந்த நாட்டு மக்களுக்கு நம்மால் ஆன உதவியை செய்தாக வேண்டும். இலங்கையில் இருந்து இந்த தகவல்கள் வந்ததும், ஈழத்தமிழ் மக்களுக்கு நம்மால் ஆன உதவிகள் செய்வோம் என்று அறிவித்தேன். இதையறிந்த இலங்கைதமிழர் தலைவர்கள், தமிழ் அமைப்புகள், ‘இலங்கை மக்களுக்கு என்றுபொதுவாக அனுப்புங்கள். மக்களை பிரித்துப் பார்க்க வேண்டாம்’ என்றார்கள். இதுதான் தமிழர் பண்பாடு.

ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக நாம் உதவி செய்தாக வேண்டும். அந்த வகையில், ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பில் 137 உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடியில் குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடர் ஆகியவற்றை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது. இந்திய தூதரகம் மூலம்தான் வழங்க வேண்டும் என்பதால் இதுபற்றி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன். பிரதமரை சந்தித்த போதும் வலியுறுத்தினேன். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதுடன், கடந்த ஏப்.15-ம் தேதி கடிதம் எழுதி நினைவூட்டினேன். ஆனால், இன்றுவரை எந்த தகவலும் இல்லை.

இலங்கையில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. காலத்தே செய்தால்தான் அது உதவி. இந்த எண்ணத்தை மத்திய அரசுக்கு சொல்லும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்புவது காலத்தின் கட்டளை என அரசு கருதுகிறது.

தீர்மானம்

இலங்கையில் தற்போது நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ தமிழக அரசு முன்வந்துள்ளது. அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால்பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கைக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்தை கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), முகமது ஷாநவாஸ் ( விசிக), நாகைமாலி (மார்க்சிஸ்ட்), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன்(கொமதேக), தி.வேல்முருகன்(தவாக), பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் வரவேற்றுப் பேசினர். பேரவை உறுப்பினர்களின் ஒரு மாதஊதியத்தை இலங்கை மக்களுக்காக வழங்குவது குறித்து அரசு அறிவித்தால், அதை வழங்க முன்வருவதாக மார்க்சிஸ்ட், விசிக, பாஜக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அவர்களைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வரின் மனிதநேயம் மிக்க அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்ததுடன், தங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் நிதியை வழங்குவதாக அறிவித்தார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “தீர்மானத்தை ஆதரித்த எதிக்கட்சித் தலைவர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர் களுக்கு நன்றி. இன்று தமிழக அரசு அறிவித்துள்ள உதவி என்பது முதல்கட்டமானதுதான். இலங்கை மக்களுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால், செய்ய அரசு என்றும் தயாராக உள்ளது. தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்தால் அவற்றையும் ஒருங்கிணைத்து மத்திய அரசின் மூலம் இலங்கை மக்களுக்கு வழங்க அரசு தயாராக உள்ளது. அதற்கு முன்னோட்டமாகத்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மற்றவர்களும் அதை பின்பற்ற வேண்டும் என்றுதான் அவர் அறிவித்துள்ளார்” என்றார்.

முதல்வர் முன்மொழிந்த அரசினர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். இதைத் தொடர்ந்து தீர்மானத்தை இணைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கடிதம் அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x