

சென்னை: செங்கல் சூளைகள், மண்பாண்டம் தயாரிப்பவர்கள், சிரமமின்றி மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் தளவாய்சுந்தரம், பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மண் எடுப்பதில் உள்ளசிக்கல்களை போக்குமாறும், அதற்காக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை மாற்றியமைத்து உதவும்படியும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
செங்கல் சூளை, மண்பாண்டத் தொழில் ஆகியவற்றுக்கு தேவையான செம்மண் எடுப்பது தொடர்பாக, கடந்த அதிமுக ஆட்சியில்சட்டப் பிரிவு 44-ல் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், அது அரசிதழில் வெளியிடப்படவில்லை. தற்போது அதை அரசிதழில் வெளியிட்டுள்ளோம்.
உதவி இயக்குநரின் அனுமதி
மண் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை. வேளாண் உதவி இயக்குநரின் அனுமதி பெற்றால் போதுமானது.
மண் எடுக்கும் கால அளவான 3 மாதத்துக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.60 பணம் செலுத்த வேண்டும் என்பன போன்ற விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டிலும் இதுகுறித்து அறிவுறுத்தியிருந்தேன்.
எனினும், சில இடங்களில் பிரச்சினை உள்ளது. இதற்கு அனுமதி அளிப்பது யார் என்பதில் குழப்பங்கள் உள்ளன. ஓரிரு நாட்களில் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.