

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி வெற்றி பெற்றார்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1996-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 4 தேர்தல்களிலும் தொடர் வெற்றிபெற்ற அர.சக்கரபாணி ஐந்தாவது முறையாக போட்டியிட்டார். முதல் சுற்று முதற்கொண்டே அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் அதிக வாக்குகளை பெற்றுவந்தார். முடிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கிட்டுச்சாமியைவிட 65,727 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அர. சக்கரபாணி வெற்றிபெற்றார்.
திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தமிழகத்திலேயே 13 முறை வென்றவர் என்ற பெருமை பெற்றுள்ளார். தென்மாவட்டங்களில் இதுவரை யாரும் தொடர்ந்து ஒரே தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றதில்லை.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அர.சக்கரபாணி கூறியதாவது: தொகுதி மக்கள் என் மீது வைத்துள்ள பாசம், நம்பிக்கைதான் இந்த வெற்றிக்கு காரணம். அவர்கள் என்னை குடும்ப உறுப்பினராகவே பார்க்கின்றனர். ஐந்தாவது முறையாக இந்த வெற்றியை கொடுத்த ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து அவர்களுக்காக எனது சேவைகள் தொடரும் என்றார்.