

சைதாப்பேட்டை தொகுதியில் 6 மாதங்களுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டையில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தினமும் 10 மணி நேரம் நடை பயணம், சைக்கிள் பயணம் உட்பட பல்வேறு வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். சைதாப்பேட்டை மேற்கு பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் குடியிருப்பு, மார்க்கெட் பகுதிகளில் நேற்று நடை பயணம் மூலம் வாக்குகளை சேகரித்தார். அப்பகுதி மக்கள் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு தெரிவித்தனர்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘நம் தொகுதியில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அதிகமாக இருக்கின்றனர். படித்த இளைஞர்களுக்கும் போதிய வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாங்கள் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் சைதாப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இதில், நூற்றுக்கான தனியார் நிறுவனங்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ரேஷன் பொருட்கள் விநியோகம் சீராகவில்லை என பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த குறைபாடுகளை நீக்கி, தாமதமில்லாமல், தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.