கிராமசபை நடைபெறுவதற்கு முன்பே ஊராட்சிகளின் வரவு-செலவு விவரங்களை பேனராக வைக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவு

கிராமசபை நடைபெறுவதற்கு முன்பே ஊராட்சிகளின் வரவு-செலவு விவரங்களை பேனராக வைக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவு
Updated on
1 min read

உடுமலை: தமிழகத்தில் கிராம சபை நடைபெறுவதற்கு முன்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஊராட்சியின் ஓராண்டுக்கான வரவு செலவு அறிக்கையை ‘பேனர்’வைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் மே 1-ம் தேதி(நாளை) தொழிலாளர் தினத்தன்றுகாலை 10 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் இயக்குநர் பிரவீன் பி.நாயர்பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:

கோடை வெயில் தாக்கம் காரணமாக காலை 10 மணிக்கே கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.அரசின் பல்வேறு திட்டப்பணிகளின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் பட்டியல் மற்றும் மத்திய, மாநிலஅரசால் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த விவரங்களை கிராம சபை கூட்டத்தில் முன்வைக்க வேண்டும்.ஏப்ரல் 2021 முதல் மார்ச் மற்றும்ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரம், வரவு-செலவு விவரங்களை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.

கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், வரவு- செலவு அறிக்கை, பயனாளிகளின் பெயர்கள், பணிகளின் முன்னேற்ற அறிக்கை ஆகியவற்றை கிராம சபை நடைபெறுவதற்கு முன்பாக 29.4.2022 மற்றும் 30.4.2022 ஆகிய இரு நாட்களில் ஊராட்சி மன்ற தகவல் பலகையில் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். கிராம சபை நடைபெறுவதற்கு முன்பே ஊராட்சிகளின் வரவு-செலவினங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், வரவு, செலவு விவரங்களை பேனராக வைக்க வேண்டும்.

மேலும் 2022-23-ம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட பணிகள் விவரம் மற்றும் பயனாளிகள் விவரம் அனைத்தும் பொதுமக்கள் முன்னிலையில் படித்துகாண்பித்து ஒப்புதல் பெற வேண்டும். கடந்த நிதியாண்டின் வரவு –செலவு விவரம் அடங்கிய சுருக்கம் கிராம சபையில் பங்கேற்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் விநியோகிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து நேற்று உடுமலை ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் தகவல் பலகையில் வரவு -செலவு அறிக்கைகளை ஒட்டும் பணி நடைபெற்றது. ஆனால் பேனர்கள் வைக்கப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, கிராம சபை கூட்டத்துக்கு பின்பே பேனர் வைக்கப்படும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in