Published : 03 May 2016 08:32 PM
Last Updated : 03 May 2016 08:32 PM

தேர்தல் களத்தில் 3,785 வேட்பாளர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3 ஆயிரத்து 462 பேர் ஆண்கள். 321 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள். 3 ஆயிரத்து 27 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 339 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேர் களத்தில் உள்ளனர். மிகக் குறைந்த அளவாக ஆற்காடு, மயிலாடுதுறை, கூடலூர் ஆகிய தொகுதிகளில் தலா 8 பேர் போட்டியிடுகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 15, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 24, தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் 25, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவிலில் 10, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் விருகம்பாக்கத்தில் 20, பாமக இளைஞரணித் தலைவர் அன்புணி ராமதாஸ் போட்டியிடும் பென்னாகரத்தில் 15 பேர் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் பிரச்சாரம் மே 14-ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. மே 16-ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. மே 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x