

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: ‘யூ டூ புரூட்டஸ்’ என்ற யூ-டியூப் சேனிலில், நடராஜப் பெருமான் குறித்து ஆபாசமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் ஆதரவுடன், இதுபோன்ற தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை சிதைப்பதை, அவமானப்படுத்துவதை தமிழக அரசு எப்படி தொடர்ந்து அனுமதிக்கிறது?
மதக் கோட்டுபாடுகள் மற்றும் இறை நம்பிக்கையை அவதூறாகப் பேசி, மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே திராவிட மாடலாக சிலர் கொண்டுள்ளனர்.
மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பவர்களை கைது செய்யத் தயங்குவது ஏன்? தவறு செய்தவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், மக்களின் வாழ்வியலோடு கலந்திருக்கும் தெய்வீகத்தை அவமதிப்பதை பாஜக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதேபோல, பாஜக மாநிலப் பொதுச் செயலர் கரு.நாகராஜனும், இதே கருத்தை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.