

திருச்சி: திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் அருகேயுள்ள பேரூர் குடித்தெருவைச் சேர்ந்தவர் நீலமேகம்(32). சிஆர்பிஎப் வீரரான இவர், காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி(28). இவர், தனது 10 மாதக் குழந்தையுடன் பேரூரில் உள்ள வீட்டில் மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி நள்ளிரவு இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், கலைவாணி அணிந்திருந்த 8.5 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த கலைவாணி, முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக ஜம்புநாதபுரம் போலீஸார் விசாரித்தனர்.
இதற்கிடையில், காஷ்மீரில் பணிபுரியும் நீலமேகம், ‘‘எங்கள் வீட்டுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், இங்கு எப்படி பணியாற்ற முடியும். எனவே, டிஜிபி நடவடிக்கை எடுத்து, குற்றவாளியை கைது செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்து, வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து, டிஜிபி சைலேந்திர பாபு நேற்று முன்தினம் இரவு நீலமேகம், கலைவாணி ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு, குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதன்படி, மத்திய மண்டல ஐ.ஜி. வே.பாலகிருஷ்ணன், எஸ்.பி. சுஜித்குமார் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, கலைவாணியிடம் நலம் விசாரித்தனர்.
இதுகுறித்து ராணுவ வீரர் நீலமேகம் கூறும்போது, ‘‘நான் வேதனையுடன் பேசிய வீடியோவைப் பார்த்துவிட்டு, டிஜிபி தொடர்பு கொண்டு, குற்றாவளியைப் பிடித்துவிடுவதாக உறுதியளித்தார். அதேபோல, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தைரியம் கூறினார்'' என்றார்.
எஸ்.பி. சுஜித்குமார் கூறும்போது, ``குற்றவாளியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாளில் குற்றவாளியைக் கைது செய்து விடுவோம்’’ என்றார்.