Published : 30 Apr 2022 06:11 AM
Last Updated : 30 Apr 2022 06:11 AM

ஆவடி | ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டை துளைத்த தோட்டா

ஆஸ்பெஸ்டாஸ் கூரையை துளைத்துக் கொண்டு, வீட்டில் விழுந்த துப்பாக்கி தோட்டா.

ஆவடி: ஆவடி அருகே ஆஸ்பெஸ்டாஸ் கூரையை துளைத்துக் கொண்டு, வீட்டில் விழுந்த துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள மிட்னமல்லி, எம்.சி.ராஜா தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (36). பெயின்டரான இவருக்கு ஜானகி என்ற மனைவியும், ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர். கடும் வெயில் காரணமாக தாங்கள் வசிக்கும் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை உள்ள வீட்டில் இருக்க இயலாது என்பதால், ஜானகி குழந்தையுடன் ஆவடி பகுதியில் உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கி வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ராஜேஷ், உணவருந்திவிட்டு, வீட்டில் உறங்கியுள்ளார். தொடர்ந்து, நேற்று காலை அவர் கண் விழித்தபோது, 9 மி.மீ. அளவு கொண்ட தோட்டா, ஆஸ்பெஸ்டாஸ் மேற் கூரையை துளைத்துக்கொண்டு, வீட்டுக்குள் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ராஜேஷ், அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து, பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில், முத்தாபுதுப்பேட்டை போலீஸார் சம்பவ இடம் விரைந்து, துப்பாக்கி தோட்டாவை கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வீட்டில் விழுந்த துப்பாக்கி தோட்டா குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x