Published : 05 May 2016 09:30 AM
Last Updated : 05 May 2016 09:30 AM

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: சீதாராம் யெச்சூரி உறுதி

மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பு களை உருவாக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி, தமாகா அணி சார்பில் ஆர்.கே.நகரில் போட்டி யிடும் வேட்பாளர் முனைவர் வசந்திதேவிக்கு வாக்களிக்கக் கோரி சென்னை தண்டையார் பேட்டையில் சீதாராம் யெச்சூரி நேற்று பேசியதாவது:

தமிழகம் திறமை மிக்க இளைஞர்களைக் கொண்ட மாநிலம். மிகக்குறைந்த ஊதியத் தில் கிடைக்கிற வேலையை செய்ய வேண்டிய நிலையில் இளைஞர்கள் உள்ளனர். இந்த இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகளை வழங்கும் செயல் திட்டம் இந்த கூட்டணி யிடம் உள்ளது. ஊழலற்ற நல்லாட்சியை வழங்க வேண்டும் என்கிற லட்சியத்தின் அடிப்படை யில் இந்த கூட்டணி உருவாகி யுள்ளது.

மத்தியில் ஆளும் கட்சியினர் மத வெறியைத் தூண்டி சிறுபான்மையினரை அச்சுறுத்தியும், துன்புறுத்தியும் வருகின்றனர். இதைத் தடுக்க பிரதமர் உத்தரவாதமளிக்க தயங்குகிறார். இந்த செயல்களைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வாய் திறக்க மறுக்கின்றன.

நாட்டில் ஆண்டுதோறும் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சம். ஆனால், 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கே வேலை கிடைக்கிறது. இங்குள்ள இளைஞர்களின் உழைப்பை சுரண்டி கொள்ளை லாபம் அடிப்பது மட்டுமே அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் மூலம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊழல் மிகப்பெரும் சவாலாக உள்ளது. இப்போதைய முதலமைச்சர் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்தார். முன்னாள் முதல்வரின் குடும்பத்தினர், அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளனர். வரவிருக்கும் தேர்தலில் இந்த 2 கட்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். மாற்று அணியான மக்கள் நலக் கூட்டணியை நீங்கள் வெற்றிபெறச் செய்து தமிழகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட உதவ வேண்டும். தமிழக மக்கள் வரலாறு படைக்கும் முடிவை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x