

கத்தியின்றி,யுத்தமின்றி, ரத்தமின்றி தங்களின் புத்தியைப் பயன்படுத்தி எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி கொள்ளையடிப்பதில் வல்லவர்கள் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள். இந்தியா முழுக்க உள்ள காவல் துறை பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள இவர்கள் கடந்த 18-ம் தேதி சென்னை தி.நகரில் 4.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து மீண்டும் காவல் துறையினரின் கவனத்தை திருச்சி பக்கம் திருப்பினர்.
சென்னையிலிருந்து ஒரு காவல் துறை உதவி ஆணையர், மூன்று காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸ் குழு கடந்த வாரம் திருச்சிக்கு கிளம்பி வந்தது. திருச்சி சரக டி.ஐ.ஜி-யை சந்தித்து விஷயத்தைக் கூறினர். அவர் ராம்ஜி நகர் கொள்ளையர்களைப் பற்றி நன்கறிந்த ஒரு ஆய்வாளரை உடன் அனுப்பி கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தார்.
ராம்ஜி நகரில் உள்ள கொள்ளையர்களைப் பற்றி தகவல் சொல்வதற்கென்றே உளவாளிகள் சிலரும் உள்ளனர். இவர்களை கவனித்தால் போதும் எங்கே? எப்போது? எப்படி? யார் கொள்ளையடித்தது? என்கிற தகவலைச் சொல்லிவிடுவார்கள். சென்னையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உளவாளிகள் மூலம்தான் அணுகினர். திருடிய நகைகளை கொடுத்து விடுவதாக சொன்னவர்கள் ஆட்களை ஒப்படைக்க முடியாது என கறாராக தெரிவித்தனராம். ஆனால், போலீஸ் அதற்கு சம்மதிக்கவில்லை.
இறுதியில் அழகுராஜா என்பவரை மட்டும் கைது செய்து அழைத்துச் சென்றனர். 3.8 கிலோ எடையுள்ள தங்க நகைகள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 1 கிலோ நகைகளும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வெளி மாநிலங்களுக்கு தப்பிச் சென்றுவிட்ட 6 கொள்ளையர்களும் இன்னமும் காவல் துறையினரிடம் சிக்கவில்லை.
கொன்னையனுக்கு தாலி கட்டுதல்…
அழகு ராஜா கைது சம்பவத்தை ‘கொன்னையனுக்கு தாலி’ கட்டி அனுப்பியதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
ராம்ஜி நகர் கொள்ளையர்கள் பாஷையில் கொன்னையன் என்றால் அவர் போலி நபர் என்று அர்த்தம். இவரை கைதியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்து அனுப்பிவைப்பதை கொன்னையனுக்கு தாலி கட்டுதல் எனச் சொல்கின்றனர். போலியாக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் நபர்களது வீட்டிற்கு ரூ.10 ஆயிரமும் அவரை ஜாமீனில் எடுத்து வெளியே கொண்டுவரவும் உதவுவார்கள். இந்த தொகைக்கு ஆசைப்பட்டு ராம்ஜி நகருக்கு வெளியே உள்ள சிலர் போலி குற்றவாளிகளாக போலீஸிடம் சிக்குகின்றனர்.
இனத்தான் சிக்கிக்கொள்ளக் கூடாது…
ஆந்திராவிலிருந்து இங்கே மில் தொழிலாளிகளாக வேலைக்கு வந்த இவர்கள் அனைவரும் ‘கேப்மாரிஸ்’ என அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இனத்தான் என தங்களை அழைத்துக் கொள்கின்றனர். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டாலும் பெரும்பாலும் காவல் துறையினரிடம் சிக்கிக் கொள்வதில்லை. அப்படியே சிக்கிக் கொண்டாலும் அவர்களுக்குப் பதிலாக போலி நபர்களுக்கு காசு கொடுத்து சிறைக்கு அனுப்பி விடுவார்கள். என்ன ஆனாலும் இனத்தான் சிக்கிக் கொள்ளக் கூடாது(?) என்பதில் கவனமாக இருப்பார்களாம்.
அதையும் மீறி சிக்கிக் கொண்டால் பிணையில் வெளிவந்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிடுவார்களாம்.
‘வல்லடைக்குப் போகிறோம்’
இவர்கள் கொள்ளையடிக்கச் செல்வதை வல்லடைக்குப் போகிறோம் என்பார்கள். கொள்ளையடிக்கும் முறையோ வித்தியாசமானது. ஒரு குழுவாகச் கிளம்பிச் சென்று பணப் புழக்கம் அதிகமுள்ள வங்கி, நகைகடை, அடகுக் கடை, ஏ.டி.எம் சென்டர் போன்ற இடத்தை அடைவதற்கு முன்பே பிரிந்து நின்றுகொள்வார்கள். ஒருவர் அதிகம் பணம் வைத்துள்ளவரை அடையாளம் கண்டு குழுவிலுள்ள மற்றவர்களுக்கு சைகை அல்லது கண் ஜாடை மூலம் சிக்னல் கொடுப்பார். இன்னொருவர் பணம் வைத்துள்ள நபர் அருகே சென்று சில ரூபாய் நோட்டுக்களை கீழே போட்டுவிட்டு ‘சார் உங்க பணம் கீழே விழுந்துடிச்சு’ என சொல்வார். கீழேகிடக்கும் சில ரூபாய் நோட்டுக்களை எடுக்கச் செல்லும் அந்த சில நொடி இடைவெளியில் பணம், பொருள்கள் உள்ள பையை இன்னொருவர் எடுத்துக்கொண்டு ஓடி தலைமறைவாகி விடுவார். பணப்பை வேறு சிலர் மூலம் கைமாறி திருச்சிக்கு வந்துவிடும்.
பிஸ்கட்டை மென்று துப்பி ‘ஆடையில் மலம் ஒட்டியிருக்கு’ எனச் சொல்வது, இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்வதுபோல் பணம் வைத்துள்ளவர் மீது மோதும்போது கொள்ளையடிப்பது ஆகிய டெக்னிக்களும் இவர்களது பாணி. தெலுங்கு அல்லது தமிழ் கலந்த தெலுங்கு மொழிகளில் வல்லடைக்குப் போகும்போது பேசிக்கொள்வார்கள்.