Published : 30 Apr 2022 06:14 AM
Last Updated : 30 Apr 2022 06:14 AM

நெல்லை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அங்காடியில் பனை பொருட்கள் விற்பனைக்கு பயணிகள் வரவேற்பு

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பனை ஓலை பொருட்கள். படம்: மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பனை பொருட்கள் விற்பனைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இங்கு நிரந்தரமாக பனை பொருள் விற்பனை அங்காடி அமைக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க அருகில் உள்ள ரயில் நிலையங்களில் 15 நாட்களுக்கு உள்ளூர் தயாரிப்புகளை விற்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தி இருந்தது.

‘ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள்’ என்ற இந்த திட்டத்தின்கீழ் ஏற்கெனவே மதுரை ரயில் நிலையத்தில் கைத்தறி பொருட்கள் மற்றும் சுங்கடிச் சேலை விற்பனை நடைபெற்றது. இதை தொடர்ந்து திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பனை பொருட்கள் விற்பனை தொடங்கியது. மே மாதம் 8-ம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறுகிறது.

இதற்காக ரயில் நிலையத்தில் தற்காலிக மாக அமைக்கப்பட்டுள்ள விற்பனை அங்காடியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு, சுக்கு காபி பவுடர், பனங்கருப்பட்டியில் தயார் செய்த மிட்டாய், அல்வா, பனம் பழ ஜூஸ், பனையோலை உள்ளிட்ட பல்வேறு பனை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு விற்பனை செய்யும் பனை பொருட்களுக்கான விலை வெளிச் சந்தையிலிருந்து 10 சதவீதம் அளவுக்கு குறைவாக இருப்பதாலும், குணம், மணம் மாறாமல் உள்ளூர் தயாரிப்பு காரணமாகவும் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மத்தியில் பனை பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

வெளிச் சந்தையில் ஒரு கிலோ உடன்குடி கருப்பட்டி ரூ.350 வரையில் விற்பனை செய்யப்படும் நிலையில் இங்கு ரூ.260-க்கு விற்பனையாகிறது.

இதுபோல் ரூ.600-க்கு விற்கப்படும் பனங் கற்கண்டு ரூ.500-க்கும், ரூ.225-க்கு விற்கப்படும் 1 லிட்டர் பதனீர் ரூ.180-க்கும், கிலோ ரூ.450-க்கு விற்கப்படும் கருப்பட்டி அல்வா ரூ.400-க்கும், ரூ.70-க்கு விற்கப்படும் 100 கிராம் சுக்குப்பொடி ரூ.60-க்கும் இங்கு விற்பனை செய்யப் படுகிறது.

இதுதவிர வெற்றிலை பெட்டி, கிலுக்கு, காய்கறிக் கூடை என்று பல்வேறு வகை யான பனை ஓலை பொருட்களும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பலரும் இந்த பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறார்கள். இருவார காலத்துக்கு மட்டுமே விற்பனை அங்காடிக்கு அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது. நிரந்தரமாக பனை பொருட் கள் விற்பனைக்கு அனுமதி அளித்தால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று பனை பொருட்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் செயலாளர் கற்பகவிநாயகம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x