பிரதமர், புதுச்சேரி முதல்வரை குறை கூற நாராயணசாமிக்கு தகுதியில்லை: நமச்சிவாயம் காட்டம்

அமைச்சர் நமச்சிவாயம் | கோப்புப் படம்
அமைச்சர் நமச்சிவாயம் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: "முதல்வராக இருந்தபோது பிரதமர் மோடியை சந்திக்க சென்றபோதெல்லாம் காங்கிரஸ் துண்டை எடுத்துவிட்டுதான் நாராயணசாமி சந்தித்தார், ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்கவே பயந்து ஓடினார்" என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அண்மையில், காங்கிரஸிலிருந்து விலகி சென்று பாஜகவில் இணைந்தோரை கடுமையாக விமர்சித்திருந்தார். 'காங்கிரஸுக்கு துரோகம் செய்து சென்றோர் நடுத்தெருவில்தான் நிற்கவேண்டும். முதல்வர் கனவில் சென்றவர் தொப்பி போட்டு சுற்றுகிறார். பொம்மை ஆட்சிதான் நடக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று கூறியதாவது: "முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாய் அடக்கத்துடன் பேச வேண்டும். தற்போது நடுத்தெருவில் யார் நிற்கிறார்கள் என்பது புதுச்சேரி மக்களுக்கு தெரியும். ஐந்து ஆண்டுகாலம் முதல்வராக இருந்து விட்டு, தேர்தலில் நிற்க திராணியில்லாமல் பயந்து ஓடியவர் நாராயணசாமி. எங்களைப்பற்றி பேச அவருக்கு தகுதியில்லை. ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நாராயணசாமி என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு முதல்வர் ரங்கசாமியை குறை கூறத் தகுதியில்லை.

தற்போது பிரதமர், உள்துறை அமைச்சர் ஆசியுடன் திட்டங்களை புதுச்சேரியில் நிறைவேற்ற தொடங்கியுள்ளோம். இதனால் வயிற்று எரிச்சலில் தரம் கெட்ட வகையில் நாராயணசாமி பேசுவது கண்டிக்கத்தக்கது. தற்போது புதுச்சேரி ஆளுநர் மாநில வளர்ச்சிக்கு ஒத்துழைத்து திட்டங்களை செயல்படுத்துகிறோம். தன்னால் செய்ய முடியாததை முதல்வர், அமைச்சர்கள் செய்வதை நாராயணசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

புதுச்சேரியில் நடப்பது பொம்மை ஆட்சியல்ல, மக்கள் ஆட்சி. முக்கியமாக பிரதமரை குறை கூற முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு தகுதியில்லை. முதல்வராக இருந்தபோது மோடியை சந்திக்க சென்றபோதெல்லாம் காங்கிரஸ் துண்டை எடுத்து விட்டுதான் நாராயணசாமி சந்தித்தார். நடிப்பதுதான் அவரது வாடிக்கை" என்று நமச்சிவாயம் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in