

வாக்குப்பதிவு இயந்திரங்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும்போது, பலரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கடுமையாக திட்டியதால் மாநகராட்சி பெண் துணை ஆணையர் அழுதபடியே கூட்டத்திலிருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படு த்தியது.
வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் நேற்று தேர்வு செய்யப்பட்டன. இதற்கான கூட்டம் நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
ஆட்சியர் கொ.வீரராகவராவ், தேர்தல் பார்வையாளர்கள் டி.கே.ஜோஸ் அமர்நாத், யஷ்வந்த்ராவ், அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். 10 தொகுதிகளில் பயன்படுத்த 8,384 இயந்திரங்கள் ஏற்கெனவே கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. இவற்றை மீண்டும் குலுக்கல் முறையில் தொகுதிவாரியாக நேற்று தேர்வு செய்யப்பட்டன. இதன் பட்டியல் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும்.
இந்த தேர்வுக் கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்க ளை கையாளும் பொறுப்பு அலுவலரான மதுரை மாநகராட்சி துணை ஆணையர் செ.சாந்தியும் பங்கேற்றார். இயந்திரங்களில் உள்ள அடையாள எண்களை பதிவு செய்வதில் ஏற்பட்ட பிழைகளை சரி செய்வது தொடர்பாக ஆட்சியர் விவரங்களைக் கேட்டுள்ளார். இதற்கு சாந்தி பதிலளித்துள்ளார். அப்போது ஆட்சியர் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்ததால் சாந்தி அழுதபடியே வெளியே றிவிட்டார். பல்வேறு அலுவலர்கள், கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெண் அதிகாரி கண்ணீர்விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ஆட்சியர் அலுவலக அலுவலர் கூறியதாவது: வாக்குச்சாவடிக்கு அனுப்பப் படும்போது பிழைகள் இருந் தால் சரி செய்யப்பட்டுவிடும். அனைத்து தேர்தல்களிலும் இது சகஜமாக நடப்பதுதான். ஆட்சியர் உத்தரவின்பேரில் 2 முறை அடையாள எண்கள் சரிபா ர்க்கப்பட்டன.
கடினமான வார்த் தைகளைப் பயன்படுத்தியது துணை ஆணையருக்கு மிக வும் சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இதனால் பலர் முன்னிலையில் கூட்டத்திலேயே அழுதுவிட்டார். உடனே கூட் டத்திலிருந்து வெளியேறிய அவரை, மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். தவறு இருப்பது தெரிந்தால் ஆட்சியர் தனியாக எச்சரித்திருக்கலாம் என்றார்.
இதையடுத்து நேற்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் துணை ஆணையர் பங்கேற்கவில்லை. இவருக்கு பதில் ஆணையர் சந்தீப் நந்தூரி பங்கேற்றார்.