

தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள உள்ள பிரச்சாரம், திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மே 6-ம் தேதி ஓசூர், சென்னையிலும் 8-ம் தேதி வேதாரண்யம், கன்னியாகுமரியிலும் பிரச்சாரம் செய்கிறார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 6-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகிறார்.
மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தை பாஜக தேசியப் பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலப் பொதுச்செயலாளர் நரேந்திரன், மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியார்களிடம் பேசிய தமிழிசை, ''தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு சாதகமான சூழல் உள்ளது. பிரதமர் மோடி 2 நாட்களும், அமித்ஷா 3 நாட்களும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கின்றனர். மத்திய அமைச்சர்கள் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் பலர் வரவுள்ளனர். கணிசமான இடங்களில் பாஜக வெற்றி பெறும். மோடி பங்கேற்கும் நந்தனம் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்பர். இது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்'' என்றார்.