Published : 29 Apr 2022 03:48 AM
Last Updated : 29 Apr 2022 03:48 AM

பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகம் உயர்த்தியது மத்திய அரசு: பிரதமரின் புகாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மாநில அரசுகளுடன் பகிர வேண்டும் என்பதால் அதை குறைத்து, மாநில அரசுகளுக்கான வருவாயில் மத்திய அரசு கைவைத்தது. ஆனால், மத்திய தல வரி, தல மேல் வரியை மாநில அரசுகளுடன் பகிர வேண்டியது இல்லை என்பதால், அவற்றை மிக கடுமையாக உயர்த்தி பல லட்சம் கோடி வருவாயையும் மத்திய அரசு தனதாக்கிக் கொண்டது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி 27-ம் தேதி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘‘எரிபொருட்களுக்கான வாட் வரியை மத்திய அரசு கடந்த நவம்பரில் குறைத்தும், சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க முன்வர வேண்டும்’ என்று கூறினார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று இதுகுறித்து பேசிய சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘‘பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை சில மாநிலங்கள் குறைக்கவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மூலமாக மத்திய அரசு ரூ.26.52 லட்சம் கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரி விக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து முதல் வர் ஸ்டாலின் பேசியதாவது: "கரோனா பாதிப்புள்ள மாநில முதல்வர்கள், அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய பிரதமர், ‘‘சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வழிவகை காணவில்லை. மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை. மாநில அரசுகளின் வரியை குறைக்காததால் தான், நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடிய வில்லை’’ என்று குறிப்பிட்டார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதெல்லாம், பெட்ரோல், டீசல் விலையை அதற்கேற்ப குறைக்காமல், உபரி வருவாயை மத்திய அரசு தனதாக் கிக்கொண்டது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மாநில அரசுகளுடன் பகிர வேண்டும் என்பதால் அதை குறைத்து, மாநில அரசுகளுக்கான வருவாயில் மத் திய அரசு கைவைத்தது. பெட்ரோல், டீசல் மீதான மத்திய தல வரி, தல மேல் வரியை மாநில அரசுகளுடன் பகிரவேண்டியது இல்லை என்பதால், அவற்றை மிக கடுமையாக உயர்த்தி மக்கள் மீது திணித்து, பல லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு தனதாக்கிக் கொண்டது.

சில மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடந்ததால், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை அதிரடியாக குறைத்து வேடம்போட்டது. தேர்தல்கள் முடிந்த பிறகு, முன்பு இருந்ததைவிட விலையை உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை மத்திய அரசு சுமத்தியுள்ளது. ஆனால், தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகு, மக்கள் நலன் கருதி, நிதிநிலையையும் பொருட்படுத்தாமல் மாநில வரியை குறைத்தது தமிழக அரசு. யார் விலையை குறைக்க முனைப்பு காட்டுகின்றனர், யார் குறைப்பதுபோல நடித்து பழியை மற்றவர் மீது போடுகின்றனர் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்" இவ்வாறு முதல்வர் கூறினார்.

தொடர்ந்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: "யார் பெட்ரோல், டீசல் போடுகிறார்கள் என்பதை கணக்கெடுக்க முடியாது. அந்த வரியை அதிகரித்தால், எதிர்மறை விளைவுகள் ஏற்படும். பல்வேறு தொழில்களுக்கு பெட்ரோல், டீசல் பயன்படுத்தப் படுவதாலும், விலை அதிகரித்தால் பணவீக்கம் அதிகரிக்கும். மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

அதனால்தான், திமுக ஆட்சி வரும்போதெல்லாம், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக் கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு முந்தைய ஆட்சியில் தமிழக அரசு வரியை உயர்த்தியபோது எதிர்ப்பு தெரிவித்தேன். அதன் பிறகு, கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போது, வரியை குறைத்தனர்.

கடந்த 2014-ல் மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான மொத்த வரி ரூ.9.48. பெரும்பான்மை பகிர்வு கலால் வரியாக இருந்தது. தற்போது இது ரூ.32. அதுவும் பல மடங்கு உயர்த்திவிட்டு ரூ.5 குறைத்துள்ளனர். அதேபோல, டீசல் மீதான வரி ரூ.3.47. இன்று ரூ.10 குறைத்த பிறகும் ரூ.22 ஆக உள்ளது. அதாவது, 7 மடங்கு உயர்த்தியுள்ளனர். நேரடி வருவாய் என்பதாக இல்லாமல், சாமானியர்களை பாதிக்கும் வகையில் மறைமுகவரி மூலமாக உயர்த்தியுள்ளனர்.

கடந்த 2011-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம் தமிழகத்துக்கு ரூ.14.47 வருவாய் வந்தது. இது தற்போது ரூ.22.54 ஆக உள்ளது. ஆனால், மத்திய அரசின் வருவாய் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. டீசல் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அளவுக்கு அதிகரித்த நிலையில் நாமும் அதிகரித்திருந்தால், அவர்கள் குறைக்கும்போது, நாமும் குறைக்கலாம். நாம் அதிகரிக்காத நிலையில் குறைக்க சொல்வது நியாயம் அல்ல. வரி பகிர்வு அளிக்காதது கூட்டாட்சி தத்துவமா? கூட்டாட்சி தத்துவத்தை யார் பின்பற்றவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x