

திருவாரூர்: தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் 3 பேரை கைது செய்து, இன்று (ஏப்.29) ஆஜர்படுத்த வேண்டும் என போலீஸாருக்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயியான இவர், நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தனது வீட்டு பத்திரத்தை வைத்து கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை அவர் முழுமையாக வட்டியுடன் செலுத்திய பின்னரும், அவருக்கு அசல் பத்திரத்தை திருப்பி வழங்காமல் வீட்டுவசதி வாரிய நிர்வாகம் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சீனிவாசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சீனிவாசனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அவருக்குரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும். மேலும், அவருடைய அசல் ஆவணத்தை உடனடியாக திருப்பித் தரவேண்டும் என மாவட்டநுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 27.12.2016 அன்று தீர்ப்பளித்தது.
ஆனால், அந்த உத்தரவின்படி வீட்டு வசதி வாரிய நிர்வாகம் செயல்படாத நிலையில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சீனிவாசன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர், தஞ்சாவூர் வீட்டுவசதி மண்டல துணைப் பதிவாளர், நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கச் செயலாளர் ஆகியோரை கைது செய்து, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஏப்.29-ல் (இன்று) ஆஜர்படுத்த திருவாரூர் எஸ்பி வாயிலாக நன்னிலம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.