

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒத்தி வைத்து, நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாகவே வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. பண வினியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த தேர்தலின் போது வாக்குப்பதிவுக்கு இரு நாட்கள் முன்பாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தடையின்றி பண வினியோகம் செய்ய தேர்தல் ஆணையம் உதவி செய்தது. இந்த ஆண்டு சோதனைச்சாவடிகளை திறந்து வைத்து வாக்காளர்களுக்கு தருவதற்கான பணத்தை தடையின்றி கொண்டு செல்ல ஆணையம் உதவி செய்கிறது.
தமிழகத்தில் இந்த அளவுக்கு பண வினியோகம் நடைபெற்ற பிறகு தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்புக்கள் இல்லை. எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலை ஒத்தி வைத்து, நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.