

சென்னை: சென்னை தியாகராய நகரை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று தாம்பரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை, வணிக வரித் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், தாம்பரம் தொகுதி திமுகஎம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பேசிய தாவது:
சென்னை மாநகரின் சில்லறை வர்த்தகப் பகுதியாக தியாகராய நகர் திகழ்கிறது. இந்தப் பகுதிக்கு, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், வெளி மாநில மக்கள் மட்டுமின்றி வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களும்கூட வந்து செல்கின்றனர்.
துபாய் , சிங்கப்பூர் ஆகிய நாடுகள் விமானங்களையும், சுற்றுலாவையும் மட்டுமே வைத்துக்கொண்டு பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. அதேபோல, தியாகராய நகர், பாண்டி பஜார் ஆகியவற்றை இணைத்து சுற்றுலாப் பகுதியாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
அதேபோல, சென்னையில் சில பகுதிகள் மொத்த விற்பனைப் பகுதிகளாக உள்ளன. அந்தப் பகுதிகளில் போலி பில்கள் அதிக அளவில் போடப்படுகின்றன. எனவே, அவற்றைக் கண்காணிக்க தனி அலுவலகம் அமைத்து, போலி பில்கள் போடப்படுவதைத் தடுத்தால், அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்தப் பகுதிக்கு, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், வெளி மாநில மக்கள் மட்டுமின்றி வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களும்கூட வந்து செல்கின்றனர்.