தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் நிறைவு

தமிழகத்தின் 234  தொகுதிகளிலும் பிரச்சாரம் நிறைவு
Updated on
2 min read

தமிழகத்தில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 776 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேரும் குறைந்த பட்சமாக, ஆற்காடு, கூடலூர், மயிலாடுதுறையில் தலா 8 பேரும் போட்டியில் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் இன்று மாலை 6 மணிக்குப் பின் யாரும் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

முன்னதாக, தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பா.ஜ வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல இடங்களில் வாக்கு சேகரித்தனர்.

இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 9-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கி, 12-ம் தேதி நெல்லையில் முடித்தார். மே 11-ம் தேதி அன்று ஜெயலலிதா முன்னறிவிப்பின்றி சென்னையில் திடீர் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் வேனில் சென்று 16 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்ததது கவனிக்கத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை கடந்த 12-ம் தேதியுடன் முடித்துவிட்டார். இந்நிலையில், 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்காக அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், வட சென்னை மக்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோர் இன்று காலை முதல் ஆர்.கே.நகர் தொகுதியில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வீதி, வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.

திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக வலம் வந்த அவர் தனக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் கல்வியாளர் வசந்தி தேவி கூட்டணி கட்சியினருடன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தண்டையார்பேட்டையில் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர், கருத்துக் கணிப்புகளை நம்பாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதேபோல், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும், மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும் பிரச்சாரத்தை முடித்தனர்.

சிந்தாதிரிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி 2001-ல் அதிமுக ஆட்சியில் தான் கைதான சம்பவத்தை விளக்கிப் பேசினார். ''திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா பயப்படத் தேவையில்லை. திமுகவுக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அமைச்சரவை உருவாகப்போகிறது. ஜெயலலிதாவால் முடக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன்'' என்றார்.

மீண்டும் திமுக ஆட்சி உருவாக இருப்பதை தெளிவாக உணர்வதாக கொளத்தூர் தொகுதியில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசினார்.

தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார். அதற்கு முன்பாக சேப்பாக்கத்தில் பிரேமலதா பேசிய போது, ''கருத்துக்கணிப்புகள் மக்களை குழப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய கடற்கரையான மெரினாவில் எவ்வளவோ வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால், திமுக எதையும் செய்யவில்லை. நிர்வாகத்திறனற்ற திமுக, அதிமுக அரசுகளால் சென்னை இன்னமும் முன்னேறவில்லை'' என்று இரு திராவிடக் கட்சிகள் மீதும் குற்றம்சாட்டினார்.

கனிமொழி திருச்சியிலும், வைகோ தூத்துக்குடியிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி, மணலி, திருவொற்றியூர் மற்றும் வேளச்சேரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அன்புமணி ராமதாஸ் தான் போட்டியிடும் பென்னாகரத்திலும், காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையிலும் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மட்டுமின்றி ஊடகங்களும் கண்காணிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணிக்கு மேல் 16-ம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை, தேர்தல் தொடர்பான எந்த விளம்பரமும், பிரச்சாரமும் கூடாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in