Published : 28 Apr 2022 11:56 AM
Last Updated : 28 Apr 2022 11:56 AM

'கோயில் தேரோட்ட வீதிகளில் இனி புதைவட மின்கம்பி' - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தஞ்சையில் தேரோட்டத்தில் 11 பேர் இறந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.28) கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு இத்துறைகளின் அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.மூர்த்தி ஆகியோர் பதிலளித்து வருகின்றனர். முன்னதாக காலை 10 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, "இனி வரும் காலங்களில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும். ஏற்கெனவே, திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில்களின் தேரோடும் வீதிகளில் மின் இணைப்பை புதைவடமாக மாற்றும் பணி நடக்கிறது. தேரோட்டம் நடைபெறும் கோயிலின் தேர் வீதிகளில் மின் இணைப்பு புதைவடத்தில் கொண்டு செல்லப்படும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தஞ்சை களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடந்த தேர் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தின் காரணமாக 11 பேர் பலியாகினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பேரவையில் அமைச்சர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்தது எப்படி? தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் வீதியுலாவின்போது, உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்தில் இருந்து தொடங்கிய தேர் வீதியுலா பிரதான சாலை, மேலத்தெரு, தெற்குத்தெரு, கீழத்தெரு வழியாகச் சென்று மீண்டும் பிரதான சாலைக்குச் செல்ல திரும்பியபோது, திருப்பத்தில் சற்று உயரமான சாலையாக இருந்ததால் அதில் ஏறும்போது தேர் நிலைகுலைந்து, அருகில் சென்ற உயரழுத்த மின்கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் தாக்கி, தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனால், தேரில் இருந்தவர்கள், தேரை இழுத்து வந்தவர்கள், அதன் அருகில் நின்றவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிவதற்கு முன்பே அனைவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். தேர் தீப்பிடித்து எரிந்ததால், அதில் இருந்த மின் விளக்குகள் வெடித்தன. இதனால் பொதுமக்கள் சிதறி ஓடினர்.

தேர் மீண்டும் நிலைக்கு வர 50 மீட்டர் தொலைவே இருந்ததால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து, உயரழுத்த மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர், தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தீயில் எரிந்த தேரை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x