Published : 28 Apr 2022 04:59 AM
Last Updated : 28 Apr 2022 04:59 AM
சென்னை: அயோத்தியா மண்டபத்தை மீண்டும் ‘ஸ்ரீராம் சமாஜ்’ அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அந்த மண்டபத்தை கையகப்படுத்தி அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு மற்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் ‘ஸ்ரீராம் சமாஜ்’ என்ற அமைப்பின் சார்பில் அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கு சுவாமி சிலைகள் வைத்து பூஜிக்கப்படுவதாகவும், பக்தர்களிடம் காணிக்கை பெறுவதாகவும், நிதி வசூலில் முறைகேடுகள் செய்வதாகவும் கூறி, இம்மண்டபத்தை அறநிலையத் துறை கடந்த 2013-ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தக்காரை நியமித்தது.
இதை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜ் அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் கடந்த 2 நாட்களாக நடந்தது.
அப்போது, ஸ்ரீராம் சமாஜ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ‘‘அயோத்தியா மண்டபத்தில் ராம நவமியை முன்னிட்டு ராமர், சீதை, அனுமன் போன்றோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தாலும் அவை ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அறநிலையத் துறையின் குற்றச்சாட்டு என்ன என்பது குறித்தும் தெளிவாக தெரிவிக்கவில்லை. அயோத்தியா மண்டபம் தனியார் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மண்டபமேயன்றி, அதை கோயிலாகக் கருத முடியாது’’ என்றார்.
ஆனால் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ‘‘அயோத்தியா மண்டப நிர்வாகிகள் பல வகைகளில் நிதி வசூலில் ஈடுபட்டுள்ளனர். மத ரீதியிலான நடவடிக்கைகள் உள்ளே நடந்ததால் தான் அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தனி நீதிபதியும் இதுதொடர்பாக தகுந்த அமைப்பிடம் முறையிட்டு பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்றுதான் உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘அயோத்தியா மண்டபம் கோயில் என்பதற்கான எந்தவொரு தீர்க்கமான ஆதாரங்களும் இல்லாமல் தக்காரை நியமித்து அறநிலையத் துறை பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. எனவே அயோத்தியா மண்டபத்தை மீண்டும் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பிடமே ஒப்படைக்க வேண்டும். அதேநேரம் ஸ்ரீராம் சமாஜ் அமைப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் முறைப்படி நோட்டீஸ் பிறப்பித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம்.
ஏனெனில் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீராம் சமாஜ் அமைப்பை கோயில் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது. அங்கு ஆகம விதிப்படி தினசரி பூஜைகள் எதுவும் நடத்தப்படவில்லை. 2004-ல் அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2013-ல் அதே புகார்தாரர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலைகள் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறுவதை அறநிலையத் துறை நிரூபிக்கவி்ல்லை’’ என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT