Published : 28 Apr 2022 04:40 AM
Last Updated : 28 Apr 2022 04:40 AM

தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆதீன குருமார்கள் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பல்வேறு மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் நேற்று சந்தித்தனர். உடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை செயலர் பி.சந்திரமோகன், துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர்.

சென்னை: பல்வேறு மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தெய்வீகப் பேரவையை மீண்டும் நடத்த வேண்டும், மடத்து நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனம் ஆகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய குருமகா சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சந்நிதி 28-வது குருமகா சந்நிதானம், அழகிய மணவாள சம்பத்குமார் ராமானுஜஜீயர் கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகர் ஆகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள் 29-வது குருமகா சந்நிதானம், ஸ்ரீகாமாட்சிதாஸ் சுவாமிகள் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின்போது அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலையத் துறை செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மே 5-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை வர உள்ள நிலையில், முதல்வரை சந்தித்த குருமார்கள் தங்கள் மடங்களின் தேவைகள், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.

சந்திப்புக்குப் பின், தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் கூறும்போது, ‘‘தெய்வீகப் பேரவையை மீண்டும் நடத்தவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளோம். திருக்குவளையில் மரகத லிங்கத்தை திருக்கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். அரசைப் பொறுத்தவரை ஆன்மீக அரசுதான்‘‘ என்றார்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறும்போது, ‘‘தஞ்சையில் எதிர்பாராமல் நடந்த விபத்து அனைவரின் உள்ளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x