Published : 28 Apr 2022 06:15 AM
Last Updated : 28 Apr 2022 06:15 AM

தஞ்சாவூரில் தேர் விபத்து நிகழ்ந்தது எப்படி? 

தஞ்சாவூரை அடுத்த களிமேடு பகுதியில் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி தீப்பிடித்ததில் உருக்குலைந்துள்ள தேரை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி.படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் வீதியுலாவின்போது, உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்தில் இருந்து தொடங்கிய தேர் வீதியுலா பிரதான சாலை, மேலத்தெரு, தெற்குத்தெரு, கீழத்தெரு வழியாகச் சென்று மீண்டும் பிரதான சாலைக்குச் செல்ல திரும்பியபோது, திருப்பத்தில் சற்று உயரமான சாலையாக இருந்ததால் அதில் ஏறும்போது தேர் நிலைகுலைந்து, அருகில் சென்ற உயரழுத்த மின்கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் தாக்கியது, தீப்பிடித்து எரியவும் தொடங்கியது.

இதனால், தேரில் இருந்தவர்கள், தேரை இழுத்து வந்தவர்கள், அதன் அருகில் நின்றவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிவதற்கு முன்பே அனைவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். தேர்தீப்பிடித்து எரிந்ததால், அதில் இருந்த மின் விளக்குகள் வெடித்தன. இதனால் பொதுமக்கள் சிதறி ஓடினர்.

தேர் மீண்டும் நிலைக்கு வர 50மீட்டர் தொலைவே இருந்ததால்கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து, உயரழுத்த மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர், தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தீயில் எரிந்த தேரை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

தந்தை - மகன் உயிரிழப்பு

இந்த விபத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் (60), அவரது மகன் ராகவன் (24) ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு மகன் மாதவன்(16) காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த சந்தோஷ் என்கிற யாதவன்(15), ராஜ்குமார்(14), பரணி(13) ஆகிய 3 சிறுவர்களும் தஞ்சாவூரில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர்.

திமுக, அதிமுக நிதியுதவி

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டஅறிவிப்பில், ‘தேர் விபத்தில் உயிர்இழந்த 11 பேர் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த 14 பேருக்கு தலாரூ.25 ஆயிரம் வீதமும் நிதியுதவிவழங்கப்படும்’ என்று தெரிவித்துஉள்ளார்.

விபத்தில் உயிரிழந்த 11 பேர்குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சமும், சிகிச்சைபெற்று வரும் 15 பேருக்கு தலாரூ.25 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் அருகே உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்; முதல்வர் நேரில் அஞ்சலி

தஞ்சாவூர் அருகே வீதியுலாவின்போது, உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோர் உடல்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கினார்.

தஞ்சாவூர் அருகே பூதலூர் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படும். அதன்படி, 94-வது அப்பர் சதய விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று இரவு 11 மணிக்கு தேர் வீதியுலா புறப்பட்டது. சப்பரத்தில் அமைக்கப்பட்ட தேரில் அப்பரின் ஐம்பொன் சிலையை வைத்து மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இரவு முழுவதும் வீதியுலா வந்த தேர், நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் கீழத் தெருவில் இருந்து பிரதான சாலைக்கு வந்து ஒரு திருப்பத்தில் திரும்பியது. அப்போது, சாலையோரத்தில் செல்லும் உயரழுத்த மின் கம்பியில் தேரின் மேல்பகுதி தட்டி உரசியது. இதனால், தேர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தேரில் அமர்ந்து வந்தவர்கள், அதை இழுத்து வந்தவர்கள், சுற்றி இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அதே ஊரைச் சேர்ந்த எம்.மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே.பிரதாப் (36), ஏ.அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர்.சந்தோஷ் என்ற யாதவன் (15), டி.செல்வம் (56), எம்.ராஜ்குமார் (14), ஆர்.சாமிநாதன் (56), ஏ.கோவிந்தராஜ் ஆகிய 10 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த சு.பரணி (13), பி.கவுசிக் (13), எஸ்.அருண்குமார் (24), மா.சுனிதா (33), வெ.ஹரிகரன் (14) உள்ளிட்ட 18 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி பரணி உயிரிழந்தார். இதனால், விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

இதுபற்றி தகவலறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். களிமேடு கிராமத்துக்கு சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். விபத்து குறித்து கள்ளபெரம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசு நிவாரணம்

தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார். பின்னர், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் சென்ற முதல்வர் ஸ்டாலின், களிமேடு கிராமத்துக்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கினார்.

விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல்களும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. பின்னர் 11 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ்களில் களிமேடு கிராமத் துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x