Published : 28 Apr 2022 06:20 AM
Last Updated : 28 Apr 2022 06:20 AM

தமிழ்த் திரையுலகில் சிறந்த சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் விருது: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நேற்று செய்தி மற்றும் விளம்பரத் துறை, எழுதுபொருள் மற்றும் அச்சத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். உடன், துறைச் செயலர் மகேசன் காசிராஜன், இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையர் ஏ.சுகந்தி.

சென்னை: தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் விருது வழங்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

பொதுமக்களுக்கும், அரசுக்கும் இடையே தூதுவராக செய்தித்துறை செயல்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் வாட்ஸ்-அப்,ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, அரசு செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டுசேர்ப்பதற்காக செய்தித் துறையில் சமூக ஊடகப் பிரிவு என்ற தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.

செய்தி-மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ளமணிமண்டபங்களில் பார்வையாளர்களை இரவு 7.30 மணி வரை அனுமதிக்கும் நடைமுறை மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்துக்கான பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்கப்படும் மருத்துவ உதவித்தொகை நடப்பு நிதியாண்டு முதல் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்படும்.

தமிழில் முதல் நாவல் எழுதியமாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு ரூ.3 கோடியில் மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும்.

வேலூர் மாநகரில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கம் ரூ.10 கோடியில் அண்ணா பல்நோக்கு கலையரங்கமாக மாற்றப்படும். தருமபுரியில் உள்ள அதியமான் கோட்டம் ரூ.1 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

செய்தி-மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமண்டபங்களில் அமர்ந்து, போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களின் வசதிக்காக 10 மணிமண்டபங்களில், தலா ரூ.1 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ்அறிஞர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களின் மணிமண்டபங்கள், நினைவகங்கள் மற்றும் அரங்குகளில், அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஒளிப்படத் தொகுப்புகள், புத்தகங்கள், காட்சிப்படுத்தப்பட்டு, க்யூஆர் கோடு மூலம் காண ஏற்பாடு செய்யப்படும். இப்பணிகள் ரூ.2 கோடியில் மேற்கொள்ளப்படும்.

எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் ரூ.5.10 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்குவோருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'கலைஞர் கலைத் துறை வித்தகர்' என்ற விருது தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 3-ம் வழங்கப்படும். இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும்.

சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சகப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் முற்றிலும் இடிக்கப்பட்டு, ரூ.34.54 கோடியில் நவீனவசதிகளுடன் கூடிய, புதிய குடியிருப்புகள் கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x