Published : 28 Apr 2022 06:06 AM
Last Updated : 28 Apr 2022 06:06 AM

டிஜிபியின் வேண்டுகோள் எதிரொலி: மரக்கன்றுகளை நட்டு, உறுதிமொழி ஏற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த வெள்ளாங்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆளுக்கொரு மரக்கன்றினை நட்டு, அதனை வளர்க்க உறுதி ஏற்றுக் கொண்டனர்.

ஈரோடு: மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என தமிழக டிஜிபி விடுத்த வேண்டுகோள் எதிரொலியாக, கோபியை அடுத்த வெள்ளாங்கோயில் அரசுப் பள்ளி மாணவர்கள், பொதுச் சொத்துகளை சேதப்படுத்த மாட்டோம் என இறைவணக்கக் கூட்டத்தில் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளி ஆசிரியரைத் தாக்குவது போலவும், அரசுப் பள்ளி சொத்துகளை சேதப்படுத்துவது போலவும் காணொளிகள் சமூக வளையதலங்களில் பரவி அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவங்களைக் குறிப்பிட்டு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், தானும் அரசுப்பள்ளியில் படித்த மாணவன் தான் என தெரிவித்துள்ள டிஜிபி, பள்ளியில் உள்ள அனைத்தும், நம்முடைய சொத்துகள் என்றும், அதனை நாம்தான் பாதுகாக்க வேண்டும். வன்முறைச் சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த வெள்ளாங்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் இறைவணக்கக் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபுவின் வேண்டுகோள் எடுத்துரைக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, ‘அரசுப் பள்ளி நமது சொத்து, வகுப்பறையில் உள்ள பொருட்கள் மற்றும் வளாகத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களை சேதப்படுத்த மாட்டோம். ஒவ்வொரு மாணவரும் மரம் ஒன்றை தத்தெடுத்து, 12-ம் வகுப்பு முடியும் வரை அதனை பராமரிப்போம்; என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்த்தலை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டு, 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு பயிலும் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரத்தை தத்தெடுத்துக் கொண்டனர். பள்ளி வளாகத்தில் ஏற்கெனவே உள்ள மரங்களுடன், புதிதாக மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிக்க உறுதி ஏற்றுக் கொண்டுள்ளனர். தாங்கள் படித்து முடிக்கும் வரை, தாங்கள் தத்தெடுத்த மரத்திற்கு நீர் ஊற்றி பராமரிப்பதை ஆர்வத்துடன் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, பள்ளி வளாகம் சோலையாக மாறுவதோடு, வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை யிலிருந்து மாணவர்கள் வெளிவர முடியும்.

மேலும், ஜன்னல் வழியாக வீசப்படும் காகிதங்களை சேமித்து அதனை விற்பனை செய்து பள்ளி பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தும் புதிய முயற்சியிலும் மாணவர்கள் இறங்கியுள்ளனர். இதனால் பள்ளி தூய்மையாக மாறியுள்ளது. அதோடு, தற்போது டிஜிபி வெளியிட்டுள்ள வேண்டுகோளை ஏற்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x