

செங்கல்பட்டு: சிவசங்கர் பாபா மீண்டும் ஜூன் 8-ம் தேதி ஆஜராக வேண்டுமென செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள சுஷில்ஹரி உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். இவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே முதல் போக்ஸோ வழக்கில் மட்டும் குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்திருந்தனர். 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு அவர் மீது இருந்த 8 வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றதால் சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜராகினார். தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதி தமிழரசி மீண்டும் வரும் ஜூன் 8-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.