Published : 28 Apr 2022 06:58 AM
Last Updated : 28 Apr 2022 06:58 AM

மதுரை ரேஷன் கடை பணியாளர்கள் பற்றாக்குறை: ஒரே விற்பனையாளருக்கு 2 கடைகளில் பணி

மதுரை: மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஒரே விற்பனையாளரே 2 கடைகளை சேர்த்து பார்க்கும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் உணவுப் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 1,336 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. குறிப்பாக மாநராட்சி பகுதியில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 30 சதவீதம் கடைகளில் விற்பனையாளர்கள் இல்லை. 40 சதவீதத்துக்கும் மேலான கடைகளில் எடையாளர்கள் இல்லை.

பல இடங்களில் ஒரே விற்பனையாளர் இரு கடைகளில் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக ரேஷன் கடைகளை முழு நேரமும் திறந்து வைக்க முடியவில்லை. வாரத்தில் 3 நாட்கள் ஒரு கடையிலும், மற்ற 3 நாட்களில் வேறொரு கடையிலும் விற்பனையாளர் பணியாற்றுகிறார். இந்த கடைகள் வாரத்தின் பாதி நாட்கள் பூட்டிக் கிடக்கின்றன. அதனால், மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.

கடை திறக்கப்படும் 3 நாட்களிலும் ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பொருட்களை வாங்க கோடை வெயிலில் நீண்ட வரிசையில் முதியவர்கள், பெண்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒரே விற்பனையாளர் இரு கடைகளையும் சேர்த்துப் பார்ப்பதையே காரணமாகக் கூறி, அடிக்கடி கடைகளை திறக்காமல் உள்ளனர். பொருட்கள் வந்துள்ளதையும் பல நேரங்களில் மக்களுக்குச் சொல்வதில்லை. அதிகாரிகளிடம் புகார் செய்தால், அதை அவர்கள் யாரும் கண்டுகொள்வது இல்லை. முறைப்படி ஆய்வுக்கும் வருவது இல்லை. இதனால், அரசு வழங்கும் மானிய விலை ரேஷன் பொருட்கள் மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்று கூறினர்.

இதுகுறித்து விற்பனையாளர்கள் கூறியதாவது: 1,000 கார்டுகளுக்கு ஒரு எடையாளர், ஒரு விற்பனையாளர் இருக்க வேண்டும் என்பது கூட்டுறவு விதிமுறை. ஆனால், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமிக்காததால் பல ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக உள்ளது.

அதேபோல் எடையாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. பல கடைகளில் எடையாளர் வேலையையும் விற்பனையாளரே மேற்கொள்கிறார். சில கடைகளில் விற்பனையாளர்களே வெளியாட்களை எடையாளராக பணியில் அமர்த்துகின்றனர். ஆனால், அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் அவர்கள் சிக்கலை சந்திக்கின்றனர்.

கடை திறந்து வைக்கப்படும் நாள் குறித்து கடை முன் அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். ஆனால், அதை அறியாத பாமர மக்கள், கடைகள் எப்போது பார்த்தாலும் பூட்டியே கிடக்கிறது என்று புகார் தெரிவிக்கின்றனர். காலியாக உள்ள விற்பனையாளர், எடையாளர் பணியிடங்களை நிரப்பினால்தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x