Published : 28 Apr 2022 06:36 AM
Last Updated : 28 Apr 2022 06:36 AM

கேரளாவில் இருந்து வரும் இறைச்சி, மருத்துவக் கழிவுகள்: குமரி மாவட்டத்தில் சுகாதாரம் கேள்விக்குறி

கன்னியாகுமரி மாவட்ட மலையோர கிராமமான கடையாலுமூட்டில் ரப்பர் தோட்டத்துடன் கூடிய இயற்கை சூழ்ந்த சாலையில் கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் கடுமையாக உள்ளது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் பொருட்கள் அடிக்கடிகேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. இதுபோன்று அனுமதியின்றி கனிம வளங்களும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இது ஒருபுறம் இருக்க, கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள்,மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் போன்றவற்றை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு லாரிகளில் கொண்டு வந்து சாலையோரங்கள், நீர்நிலை ஓரங்களில் சத்தமின்றி கொட்டிச் செல்கின்றனர்.

தொடர்ந்து நிகழும் இந்த கழிவுகள் கொட்டும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி யார் தான் வைப்பார்களோ? என, பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

கேரளாவில் இருந்து நள்ளிரவு நேரங்களில் கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் நுழைகின்றன. திருவட்டாறு, குலசேகரம், திற்பரப்பு, அருமனை, சிற்றாறு, களியல், கடையாலுமூடு என, அனைத்து பகுதிகளிலும் மலையோரங்கள், சாலையோரங்கள், நீர்நிலை ஓரங்களில் இறைச்சி, மருத்துவக் கழிவுகள் குப்பையாக கொட்டப்பட்டுள்ளன.

கேரளாவில் இருந்து துர்நாற்றத்துடன் வரும் இந்த வாகனங்களை பலநேரம் பொதுமக்கள் அடையாளம் கண்டு களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் சிறைபிடித்து காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர். உள்ளாட்சி நிர்வாகங்களால் அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் மீண்டும் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

கழிவுகளை கொட்டுவது, கனிமவளங்களை சுரண்டுவது போன்றவற்றுக்கு உறுதியான கடும் கட்டுப்பாடுகள், தண்டனைகள் ஏதும்இங்கு விதிக்கப்படாததே இதுபோன்ற முறைகேடுகளுக்கு காரணம் என, இயற்கை ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x