Published : 28 Apr 2022 06:50 AM
Last Updated : 28 Apr 2022 06:50 AM
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே கிடைத்த தங்க நாணயங்கள் மூலம், பாரசீக மொழி பேசும் மேலை நாடுகளுடன் இப்பகுதி வணிக தொடர்பில் இருந்தது வெளிப்படுகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொன்னமராவதி அருகே ஏனாதி பகுதியில் வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டியபோது, ஒரு மண் கலயத்தில் இருந்த 16 தங்க நாணயங்கள் நேற்று முன்தினம் கிடைத்தன. இவற்றை பொன்னமராவதி வட்டாட்சியர் ஜயபாரதி கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
இப்பகுதியில் மிகவும் பழமையான தங்க நாணயங்கள் கிடைத்திருப்பது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆர்வலர்கள் கூறியது: இந்த நாணயங்கள் 7-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக தெரிகிறது. நாணயங்களில் பாரசீக மொழி எழுதப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் இப்பகுதியானது மேலை நாடுகளுடன் (பாரசீக மொழி பேசும்) வணிகத் தொடர்பில் இருந்ததை உணர முடிகிறது.இவை, தினார் வகையைச் சேர்ந்த நாணயமாக உள்ளது.
கவனத்துக்குரியதாக உள்ள இந்த நாணய கண்டெடுப்பு மூலம் பொன்னமராவதி பகுதி மேலைநாடுகளுடன் வணிக தொடர்பிலிருந்ததை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மேலும், நாணயங்களில் துளையிடப்பட்டு இருப்பதால் அணிகலன்களாக பயன்படுத்தியதும் தெரிகிறது.
இந்த நாணயங்களை பொறுத்தவரை தினசரி பயன்பாட்டில் இருந்ததாக இல்லை. வெளிநாடுகளைச் சேர்ந்த மன்னர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கழஞ்சு என்ற நகை அளவிடும் முறை பின்பற்றப்பட்டதையும் அறிய முடிகிறது. இந்த நாணயங்களை பொன்னமராவதி சார் கருவூலத்திலிருந்து தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர் ஆய்வுக்கு உட்படுத்தி, இதனுடைய காலம், நாணயத்தை வெளியிட்ட மன்னர் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறிவித்தால் மட்டுமே இப்பகுதியின் வணிகத் தொடர்பை உலகறியச் செய்ய முடியும்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் இந்த நாணயம் குறித்த முழு தகவலையும் தொல்லியல் துறை சார்பாக வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT