Published : 22 May 2016 12:36 PM
Last Updated : 22 May 2016 12:36 PM

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகப் பணியாற்றுவோம் - திமுக தலைவர் கருணாநிதி உறுதி

தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வலிவுடன் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியாகச் செயல்படக் கூடிய வாய்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் 15-வது சட்டப் பேரவைக்கு, நடந்து முடிந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றியா? தோல்வியா? தோல்வி என்றால் அது எந்த அளவிற்கான தோல்வி என்பது பற்றி சில புள்ளி விவரங்களைக் காணலாம்.

தற்போது நடைபெற்ற 234 தொகுதிகளுக்கான தேர்தலில், அ.தி.மு.க. அணி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே தான் போட்டியிட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 இடங்களையும், மனித நேய மக்கள் கட்சிக்கு 4 இடங்களையும், புதிய தமிழகம் கட்சிக்கு 4 இடங்களையும் அளித்தது போக எஞ்சிய 180 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னம் தான் அ.தி.மு.க. வை எதிர்த்துப் போட்டியிட்டது. இந்த 180 இடங்களில்கூட மக்கள் தே.மு.தி.க. கட்சிக்கு 3 இடங்களும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப் படை, விவசாயத் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடமும் அளித்தது போக 174 இடங்களில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது.

அதிகாரப் பூர்வமாக 232 தொகுதிகளில், தற்போது அறிவிக்கப் பட்டுள்ள தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. 134 இடங்களிலும், தி.மு.கழக அணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த 98 இடங்களில், தி.மு.கழகம் 89 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

தி.மு. கழகமும், அ.தி.மு.க. வும் நேரடியாக போட்டியிட்ட 172 இடங்களில், திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களிலும், அ.தி.மு.க. 83 இடங்களிலும் தான் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் ஒட்டுமொத்தமாக 232 தொகுதிகளில் 134 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதாகக் கூறுகிறார்களே, அது எப்படி? காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 41 இடங்களில் 33 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட்ட 5 இடங்களில் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும், புதிய தமிழகம் போட்டி யிட்ட 4 இடங்களிலும், மக்கள் தே.மு.தி.க. போட்டியிட்ட 3 இடங்களிலும், மற்றும் தி.மு.கழக ஆதரவோடு போட்டியிட்ட 3 கட்சிகள் போட்டியிட்ட 3 இடங்களிலுமாக 51 இடங்களில், அதாவது தி.மு. கழகத்தின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 60 இடங்களில் 51 இடங்களை, அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இது பற்றி “தினத்தந்தி” நாளிதழிலேயே “கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதால் தி.மு.க. வுக்கு ஏற்பட்ட இழப்பு” என்ற தலைப்பில் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

தோழமைக் கட்சிகளைப் பற்றி குறை கூறுவதற்காக நான் இதையெல்லாம் சொல்கிறேன் என்று யாரும் தவறாக கருதிடக் கூடாது. அந்தக் கட்சியினரும் அப்படி நினைக்க வேண்டாம். தி.மு. கழகத்தை இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் பெருவாரியாக ஆதரிக்கவே முனைந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இந்த விவரங்களைத் தெரிவிக்கிறேனே தவிர, கூட்டணிக் கட்சிகளை குறை கூறுவதற்காக அல்ல.

“தி இந்து” ஆங்கில நாளிதழ் “DMK ahead of AIADMK in “Contested Vote Share” - Party’s performance was pulled down by that of its allies, including Congress” (அதாவது போட்டியிட்ட வாக்குப் பங்கீட்டில் அ.தி.மு.க.வை தி.மு.க. முந்தியது) என்ற தலைப்பில் விரிவாக ஒரு செய்திக் கட்டுரை தீட்டியுள்ளது. அந்தக் கட்டுரையில், “While DMK polled 41.05 % in 176 seats, the AIADMK polled 40.78 % in 232 seats” (176 தொகுதிகளில் தி.மு.க. வுக்கு 41.05% வாக்குகள் விழுந்துள்ள நிலையில், அ.தி.மு.க. 232 தொகுதிகளில் 40.78% வாக்குகளே பெற்றது) என்று நான் கூறவில்லை, “தி இந்து” ஆங்கில நாளிதழ், ஆதாரப் பூர்வமாக, கணக்கியல் அடிப்படையில் சரியாகக் கணக்கிட்டு, 20-5-2016 அன்று எழுதியுள்ளது.

அடுத்து, 2011ஆம் ஆண்டு தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற போது, தி.மு.கழகக் கூட்டணியும், அ.தி.மு.க. கூட்டணியும் வாங்கிய வாக்குகளைப் பார்க்கலாம்.

அ.தி.மு.க. கூட்டணி வாங்கிய வாக்குகள் 1 கோடியே 90 இலட்சத்து, 81 ஆயிரத்து, 571. தி.மு. கழகக் கூட்டணி வாங்கிய வாக்குகள் 1 கோடியே 35 இலட்சத்து 13 ஆயிரத்து 816. 2011ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், இரண்டு அணிக்கும் இடையே உள்ள வாக்குகள் வித்தியாசம் 55 இலட்சத்து 67 ஆயிரத்து 755.

தற்போது 2016ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இரண்டு அணிகளும் வாங்கியுள்ள வாக்குகள் விவரத்தைப் பார்த்தால், அ.தி.மு.க. கூட்டணி வாங்கிய வாக்குகள் 1 கோடியே 76 இலட்சத்து 17 ஆயிரத்து 60 வாக்குகள். அதாவது 2011ஆம் ஆண்ட பொதுத் தேர்தலை விட 14 இலட்சத்து, 64 ஆயிரத்து 511 வாக்குகள் குறைவாக, அ.தி.மு.க. பெற்றுள்ளது.

அதே நேரத்தில், கடந்த 2011ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.கழகக் கூட்டணி வாங்கிய வாக்குகளுக்கும், தற்போது வாங்கியுள்ள வாக்குகளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்க வேண்டும். 2011இல் தி.மு.கழகக் கூட்டணி வாங்கிய வாக்குகள் 1 கோடியே 35 இலட்சத்து 13 ஆயிரத்து 816. தற்போது 2016ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.கழகக் கூட்டணி வாங்கியுள்ள வாக்குகள் 1 கோடியே 71 இலட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள். அதாவது ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, தற்போது 2016இல் தி.மு.கழகக் கூட்டணியின் வாக்குகள் எவ்வளவு கூடுதலாகி இருக்கிறது என்று கணக்கிட்டால் 36 இலட்சத்து 61 ஆயிரத்து 558 வாக்குகள் பெருகியுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா அணி இழந்துள்ள வாக்குகள் 14 இலட்சத்து 64 ஆயிரத்து 511. அதே நேரத்தில் தி.மு.கழக அணி அதிகமாகப் பெற்ற வாக்குகள் 36 இலட்சத்து 61 ஆயிரத்து 558. யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள்? வேட்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதாகச் சொல்லிக் கொள்ளலாமே தவிர, உண்மையில் கடந்த தேர்தலுக்கும், இப்போதைய தேர்தலுக்கும் உள்ள புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தி.மு.கழகம் வெற்றி பெற்றிருக்கிறதா இல்லையா?

இன்னும் கூற வேண்டுமேயானால், 2011ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகச் சட்டப் பேரவையில் பெற்றிருந்த இடங்கள் 23 தான். 2016ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, தற்போது தமிழகச் சட்டப் பேரவையில் தி.மு.க. பெற்றுள்ள

இடங்கள் 89. இதுதவிர இன்னும் இரண்டு இடங்களில் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. 23 இடங்களில் மட்டுமே இருந்த தி.மு.க., ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 89 இடங்கள் என்ற அளவுக்கு, அதாவது சுமார் நான்கு மடங்கு உறுப்பினர்கள் கூடுதலாகி இருக்கிறார்கள் என்றால், அது வெற்றியா? தோல்வியா?

அதே நேரத்தில் 2011ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. 165 இடங்களில் போட்டியிட்டு, சட்டப் பேரவையில் அப்போது பெற்றிருந்த இடங்கள் 150. அ.தி.மு.க. வின் தோழமைக் கட்சியாக இருந்து, அப்போது 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது 234 இடங்களிலும் அ.தி.மு.க. போட்டியிட்டு, பெற்றுள்ள இடங்கள் வெறும் 134 தான்.

2016ஆம் ஆண்டில் இரண்டு அணிகளும் பெற்ற வாக்குகளைக் கணக்கிட்டால் கூட, அ.தி.மு.க. அணிக்கும், தி.மு. கழக அணிக்கும் உள்ள வித்தியாசம் 4 இலட்சத்து, 41 ஆயிரத்து 646 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. அதாவது 1.1 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அ.தி.மு.கவுக்கு கிடைத்துள்ளது என்பதே உண்மை.

அ.தி.மு.க. சில தொகுதிகளில் வெற்றி பெற்றது குறித்து பிரச்சினைகள் எழுப்பப்பட்ட போது, ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க. வுக்கு அனுசரணையாக இருந்து வந்த தேர்தல் ஆணையம் கடைசியில் அதிலேயும் பாரபட்சமாக ஆளுங்கட்சி வெற்றி பெற்றதாக சட்ட விரோதமாக அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2 தொகுதி களில் 100 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்திலும், 8 தொகுதிகளில் 101 முதல் 1000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்திலும், 21 தொகுதி களில் 1001 முதல் 5000 வரையிலான வாக்குகள் வித்தியாசத்திலும், 22 தொகுதிகளில் 5001 முதல் 10000 வரையிலான வாக்குகள் வித்தியாசத்திலுமாக மொத்தம் 53 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றி ருக்கிறார்கள்.

இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் பார்க்கும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தலில் வெற்றி முகட்டினை சட்ட ரீதியாக எட்டிப் பிடிப்பதில் மிகச் சிறிய இடைவெளி ஒன்று ஏற்பட்டு விட்டது என்பது தான் உண்மை. ஆனால் தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வலிவுடன் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியாகச் செயல்படக் கூடிய வாய்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பினை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழகச் சட்டப் பேரவையில் ஆக்கப் பூர்வமான வகையில் நல்லதோர் எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்சினைகளை முன் வைத்துப் பணியாற்றும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x