

சென்னை: சென்னை ஐஐடியில் பிஏ2 என்று அழைக்கப்படும் ஒமைக்ரான் தொற்றுதான் கண்டறியப்பட்டுள்ளதாகவும், புதிய உருமாறிய தொற்று இல்லை சுகாதாரத் தறை தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை ஐஐடியில் கடந்த 19-ம் தேதி ஒரு மாணவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, 20-ம் தேதி 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில், 21-ம் தேதி மேலும் 9 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, ஐஐடியில் உள்ள அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி தற்போது வரை சென்னை ஐஐடியில் 4974 பேருக்கு கரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2729 முடிவுகள் தற்போது வரை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை 111 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 33 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மொத்த பாதிப்பு 145 ஆக உயர்ந்துள்ளது.
இதில் முதற்கட்டமாக 25 மாதிரிகள் மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் உருமாறிய கொரனோ பாதிப்புகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 93 சதவீதத்தினருக்கு ஒமைக்ரான் BA2 பாதிப்பு இருக்கும் சூழலில் 25 நபர்களுக்கும் இந்த வகை பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வகை உருமாற்றம் இல்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.