Published : 27 Apr 2022 12:48 PM
Last Updated : 27 Apr 2022 12:48 PM

தஞ்சை தேர் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஈபிஎஸ்

சென்னை: தஞ்சை தேர் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் திருவிழாக் காலங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. தமிழகத்தில் திருவிழாக் காலங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " தஞ்சாவூர் மாவட்டம் மேலவலி ஊராட்சி களிமேடு கிராமத்தில், அப்பர் குழு பூஜை 94-ம் ஆண்டு, விழா விமரிசையாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் ஒரு நிகழ்வாக, இன்று விடியற்காலை தேர் திருவிழா நடைபெற்றது. தேரினை அப்பகுதி மக்கள் வடம்பிடித்து இழுத்து வந்த நிலையில், தஞ்சை பூதலூர் சாலையில் தேர் திரும்பும்போது, மேலே சென்ற உயரழுத்த மின்சாரக் கம்பியின் மீது தேர் உரசியதால், தேர் மீது மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர்.

மேலும் 4 சிறுவர் மற்றும் ஒரு பெண் உள்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தேரினை இழுத்து வரும்போது அபப்குதியில் உள்ள சாலையில் தண்ணீர் இருந்தததாகவும், இதனால் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள், தேரினை விட்டுத் தள்ளி நின்றதால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை அறிந்தவுடன் நான் வேதனையடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலோடு வருத்தத்தையும் தெரிவித்தேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தேர் திருவிழா என்றாலே, தேரோடும் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும். சாலைகளை செப்பணிட வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இவையெல்லாம் நடந்தததாக தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் முறையாக திட்டமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததாலேயே இத்துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது இது போதாது. இதனை உயர்த்தி ரூ.25 லட்சமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணமும், மருத்துவ சிகிச்சையும் வழங்க வேணடும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற அதிமுக மூத்த உறுப்பினர் வைத்தியலிங்கம் நேரடியாகச் சென்று ஆறுதல் தெரிவிக்கவுள்ளார்.

இந்த ஆண்டு மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதிலும் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அதிமுக சார்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தோம். ஒவ்வொரு ஆண்டும் மதுரையில், சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. கள்ளழகர் தல்லாகுளத்தில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்பட்டு, வைகையாற்றில் அதிகாலை 5.50 மணியளவில் இறங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு சாமியை சுமந்து வருகின்ற கீர் பாதத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கு முழுமையாக ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால், கள்ளழகர் நள்ளிரவுக்குப் பதிலாக தாமதாகப் புறப்பட்டு வழியில் உள்ள 14 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளாமல், நேரடியாக வைகை ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்டார்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x