தமிழகத்தில் இலவச பூஸ்டர் தடுப்பூசி வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: டெல்லி, ஹரியானாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கரோனா பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில், "ஹரியானாவில் 18 முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் கரோனா தொற்றைத் தடுப்பதற்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மாநில அரசின் செலவில் இலவசமாக செலுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதே அறிவிப்பை டெல்லி அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலும் கரோனா பரவலைத் தடுக்க 60 வயதுக்கு உட்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கடந்த 11-ஆம் தேதி தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்திருந்தேன். அது உடனடியாக ஏற்கப்பட வேண்டும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் விகிதம் சற்று அதிகரித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் நான்காவது அலை தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

60 வயதுக்குட்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படுகிறது; ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழைகளால் இவ்வளவு கட்டணம் செலுத்துவது சாத்தியமல்ல. அதனால் அனைவருக்கும் தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in