

சென்னை: தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வைகோ, ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக இளைஞரனித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், திருவிழா பாதுகாப்புக்கு என புதிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தஞ்சாவூர் அருகில் களிமேடு அப்பர்சாமி திருமடத்தின் தேர்த் திருவிழாவில், மின்சாரம் பாய்ந்து, 12 பேர் இறந்தனர். 15 பேர் படுகாயம்; அவர்களுள் 4 பேரின் நிலைமை கவலைக்கு இடமாக இருப்பதாக வந்திருக்கின்ற செய்திகள், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்துகின்றது. தேர் வந்த வழியில் புதிய சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதனால், சாலை சற்றே உயர்ந்து இருப்பதையும், தேரின் உயரம், மின் கம்பங்களின் உயரத்தையும் சரியாகக் கணிக்கத் தவறி விட்டனர். தேர்ச்சக்கரங்கள் உருளுவதற்கு ஏதுவாக தண்ணீர் ஊற்றி இருக்கின்றார்கள். ஒரு இடத்தில் சற்றே தேங்கி நின்ற தண்ணீரில் சக்கரங்கள் நழுவி, மின் கம்பத்தின் மீது சாய்ந்தது, ஜென் செட் வெடித்துச் சிதறியதால், இந்த அளவிற்கு கடுமையான விபத்து நிகழ்ந்து இருப்பதாகத் தெரிகின்றது.
அண்மையில் மதுரையில் நடைபெற்று முடிந்த கள்ளழகர் திருவிழாவில், பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் இறந்தார்கள், பலர் காயம் அடைந்தார்கள், பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கின்றது. மதுரையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில், பல்லாயிரக்கணக்கானவர்கள் நெருக்கியடித்துக் கொண்டு, வடம் பிடித்து இழுத்துச் சென்றதைப் பார்த்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. அந்த இடத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
இரண்டு ஆண்டுகள் கரோனா முடக்கத்திற்குப் பிறகு நடக்கின்ற இத்தகைய திருவிழாக்களில், கரோனா கட்டுப்பாடுகள் எதனையும் மக்கள் பின்பற்றவில்லை. ஏற்கெனவே பல ஊர்களில் தேர்கள் சரிந்து பலர் இறந்திருக்கின்றார்கள், பலர் உடல் உறுப்புகளை இழந்து இருக்கின்றார்கள். எனவே, இன்றைய நிகழ்வை ஒரு பாடமாகக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற கேடுகள் நேராத வண்ணம், தமிழக அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்கள் கூடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
தாஜ்மகாலைப் பார்க்க, ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் வரையிலும் வந்து கொண்டு இருந்தார்கள். எனவே, உத்தரப் பிரதேச அரசு, இணைய வழி முன்பதிவை அறிமுகம் செய்து, ஒரு நாளைக்கு 40,000 பேர்தான் பார்க்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதுபோல, காலத்திற்கு ஏற்ப, ஒரு இடத்தில் இவ்வளவு பேர்தான் கூடலாம் என்பதைக் கணக்கிட்டு, திருவிழாக்களில் பங்கேற்பவர்களுக்கு உச்சவரம்பு வரையறை வகுக்க வேண்டும். தேர்களின் மரச்சக்கரங்கள் பழுது அடைந்த காரணத்தால், கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் பெரும்பாலான தேர்களுக்கு, திருச்சி பெல் நிறுவனத்தார் இரும்புச் சக்கரங்கள் ஆக்கித் தந்தார்கள். அதுபோல, இனி தேர்களை ஆட்கள் இழுப்பதற்குப் பதிலாக, இழுவைப் பொறிகளைக் கொண்டு இழுத்துச் செல்வதற்கு, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். களிமேடு திருவிழாவில் உயிர் இழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அரசு உரிய இழப்பு ஈடு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் சதயவிழா தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 15 அடி உயரம் கொண்ட தேர் செல்லும் பாதையின் ஓரத்திலும், குறுக்கிலும் மின் கம்பிகள் செல்கின்றன. மின் கம்பிகள் தாழ்வாக செல்லும் இடங்களில் மின்சாரக் கம்பியைத் தூக்கிப் பிடித்து தேர் செல்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேரோட்டம் முடிந்து திரும்பும் போது எதிர்பாராத விதமாக தேரின் உச்சி மின்சாரக் கம்பியில் பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளது. அதுமட்டுமின்றி அப்பரை வழிபடுவதற்காக மக்கள் ஊற்றிய தண்ணீர் சாலையில் தேங்கி நின்றதால் அதன் வழியாகவும் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் என்னவாக இருந்தாலும், அதன் விளைவுகள் தாங்கிக் கொள்ள முடியாதவை. மிகவும் மகிழ்ச்சியாக தேர் திருவிழாவைக் கொண்டாடத் தொடங்கிய களிமேடு கிராமமே இப்போது சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இத்தகைய சோகங்கள் இனியும் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும். களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 15 பேருக்கும் சிறப்பான மருத்துவம் அளித்து, அவர்களின் உயிர்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: களிமேடு தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெருந்துயரத்தைத் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கூடுகைகளில் விழா ஏற்பாட்டாளர்களுடன் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, உள்ளூர் நிர்வாகம் ஆகியன கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாதுகாப்பான விழாக்களுக்கான நெறிமுறைகள் உறுதியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் தினகரன்: தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் உடல் நலம் பெற்றிட பிராத்திக்கிறேன்.இவ்விபத்தில் பலியானோருக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது, உரிய முறையில் விசாரித்து விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இனிவரும் காலங்களில் மக்கள் பெருமளவில் கூடும் திருவிழாக்களில் மிகுந்த கவனத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.