'தமிழக அரசு ஆன்மிக அரசுதான்' - தருமபுரம் ஆதீனம்

'தமிழக அரசு ஆன்மிக அரசுதான்' - தருமபுரம் ஆதீனம்
Updated on
1 min read

சென்னை: "இந்த ஆட்சிக் காலத்தில், எங்களுக்கு சொந்தமான 28 கோயில்களில் 11 கோயில்களுக்கு நாங்கள் கும்பாபிஷேகம் செய்துவிட்டோம். குழுக்கள் மூலம் தீர்மானம் போட்டு, நாங்கள் கேட்டபோதெல்லாம் நிறைவேற்றிவிட்டார்கள். இது ஆன்மிக அரசுதான். எங்களது கொள்கையில் அரசு தலையிடுவதில்லை" என்று தருமபுரம் ஆதீனம் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் வரும் மே மாதம் 5-ம் தேதி இந்துசமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட 11 ஆதீனங்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

முதல்வரைச் சந்தித்த பின்னர் தருமபுரம் ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " திருமடங்களுக்கு என்று குத்தகைதாரர்களுக்கு பட்டா நிலங்கள் கொடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து அரசு இணைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். மேலும் திருக்குவளையில் மரகதலிங்கம் கிடைத்திருக்கிறது. அதனை இந்த அரசுத்துறையினர்தான் தேடி கண்டுபிடித்தனர். எனவே அதனை மீண்டும் திருக்கோயிலில் ஒப்படைக்க வேண்டிய வழிவகைகளை செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளோம்.

தெய்வீகப் பேரவை என்பது, அனைத்து ஆதீனங்கள், சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் அனைவரும் சேர்ந்திருக்கிற அமைப்பாகும். இந்த அமைப்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் செம்மையாகவே நடைபெற்றது. எனவே அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையரிடம் முதல்வர் கூறியிருக்கிறார்.

ஆதீனங்களுக்கென்று சில சட்ட திட்டங்கள், சில பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. எனவே அரசு திருக்கோயில்களோடு, திரு மடங்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என சொல்லியிருக்கிறோம்.

இந்த ஆட்சிக் காலத்தில், எங்களுக்குச் சொந்தமான 28 கோயில்களில் 11 கோயில்களுக்கு நாங்கள் கும்பாபிஷேகம் செய்துவிட்டோம். குழுக்கள் மூலம் தீர்மானம் போட்டு, நாங்கள் கேட்டபோதெல்லாம் நிறைவேற்றிவிட்டார்கள். இது ஆன்மிக அரசுதான். அவர்கள் அவர்களுடைய கொள்கையை பார்த்துக் கொள்கின்றனர், நாங்கள் எங்கள் கொள்கையை பார்த்துக் கொள்கிறோம். எங்களது கொள்கைகளில் அவர்கள் தலையிடவில்லை. எனவே அதனைப் பாராட்டுகிறோம்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in